• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பின் அரசியல் வரலாற்றில் அணையாத ஒளி செல்லின்செல்வர் செல்லையா இராஜதுரை 

இலங்கை

மட்டக்களப்பின் அரசியல் வரலாற்றில் அணையாத ஒளி செல்லின்செல்வர் செல்லையா இராஜதுரை அவர்கள் 98வது வயதில் தமிழகத்தில் இயற்கை எய்தினார்! ஒரு காலத்தை உருவாக்கிய தலைவர் – ஒரு தலைமுறையை வடிவமைத்த முன்னோடி மட்டக்களப்பின் அறுபதாண்டு கால அரசியல் பரிணாமத்தில். அழிக்க முடியாத தடம் பதித்த சில மாபெரும் ஆளுமைகள் உள்ளனர். அதில் முன்னணியில் திகழ்ந்தவர் செல்லின்செல்வர் செல்லையா இராஜதுரை.

அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. ஒரு இலக்கியவாதி, ஒரு சிறந்த மேடைப்பேச்சாளர், தன்னுடைய பேச்சு வன்மையால் மக்களைக் கவர்ந்த தமிழ்ப் பேச்சாளர். தந்தை செல்வாவின் பாசத்திற்குரிய மகனாக இருந்தவர். மட்டக்களப்பு மக்களின் இதயங்களில் முடிசூடா மன்னன் அவர்.
பொது மக்கள் அன்பையும் பாசத்தையும சம்பாதிப்பவர்கள் சிலரே. அவர் அந்தச் சிறப்பு பெற்றவர். கட்சிக் கொடி மரங்களையும், தேர்தல் மேடைகளையும் தாண்டி மக்களின் உள்ளங்களில் பதிந்திருந்த மரியாதை மட்டக்களப்பின் ஒவ்வொரு தெருக்களிலும் மண்ணின் மணத்திலும் இன்றும் அவரது பெயரைச் சுவடெனக் காத்து நிற்கிறது.
தமிழரசுக்கட்சியின் உயிர் நாடியகத் திகழ்ந்தவர். மட்டுநகரில் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சியில் அவர் வகித்த பங்கு மகத்தானது ஒரு அரசியல் பொறுப்பு அல்ல. ஒரு ஆன்மீகப் பண்பு. கொள்கைகள், தமிழின அரசியல் உரிமைகள், மொழி–கலாசாரம்–அடையாளப் பாதுகாப்பு ஆகியவற்றை மக்களுக்குள் மிகத் தெளிவாகவும் பண்பாகவும் விளக்கக்கூடிய சிறந்த தார்க்கிக பேச்சாளராக அவர் மதிக்கப்பட்டார்.
அவரது உரைகளில் பகுத்தறிவின் நுட்பமும், இலக்கியத்தின் இனிமையும், தமிழின் தூய்மையும் கலந்து விளங்கியவை. அவர் மேடையேறினால் மக்கள் கேட்டுக் கொள்ளாமல் கூட கேட்கத் தூண்டும் அளவு அவரது வார்த்தைகள் உயிர்பெற்றுப் பேசின. தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மட்டக்களப்பு மக்களின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அவர் ஆற்றிய சேவைகள் அரசியல் மேடையையும் தாண்டி இருந்தன.
கிழக்குத் தமிழரின் குரலை உயர்த்தியவர். மலேசியத் தமிழர்களுடனும், தென்னிந்திய– தாயகத் தமிழர்களுடனும் நாகரிகத் தலையாய உறவுகளைப் பேணியும் மேம்படுத்தியும் அவர் மதிப்புடன் பணி புரிந்தார். மக்களுள் வாழ்ந்த மனிதநேயம் அவர் அரசியல்வாதி என்பதற்கு அப்பால் பண்பான மனிதர். மகத்தான தமிழ்த்தேசியவாதி.
அரசியலில் உறுதி சொல்லில் சீர்மை, செயலில் நேர்மை இவை மூன்றும் அவரை யாராலும் அசைக்க முடியாததலைவராக உருவாக்கின.
மட்டக்களப்பின் அரசியல் திசையை மாற்றியவர் தமிழரசுக்கட்சியின் கிழக்குப் பெருக்கத்தைக் கட்டியவர் தமிழ்ச்சொல்லின் இனிமையை மேடையில் பேசியே மக்களின் நம்பிக்கையில் வாழ்ந்த தலைவர் . நேர்மையில் தளராத அரசியல் ஆளுமை இலக்கியப் பேச்சின் மானமிகு கலைஞர்
இந்தப் பண்புகள் தலைமுறைகள் கடந்தும் அரசியல் வரலாற்றில் அவரது பெயர் ஒளிர்கின்ற நட்சத்திரமே. செல்லின்செல்வர் செல்லையா இராஜதுரை அவர்கள் ஒரு காலத்தைத் தாண்டி நிற்கும் மனிதர். அரசியல் மேடையின் நடிகர் அல்ல. தமிழ்மக்கள் மனங்களின் நாயகர் அவர். மட்டக்களப்பின் பொற்கால நினைவுகளில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. அவரை மறக்கவோ மறைக்கவோ வரலாற்றில் இடமில்லை.
1970களில் அண்ணன் இராஜதுரை அவர்களை முதன் முதலாக யாழ்ப்பாணத்து தமிழரசுக்கட்சி மேடைகளிலேயே பார்த்தவன் நான். தமிழரசுக்கட்சியின் பிரசாரக் கூட்டங்களில் இறுதிப் பேச்சாளர் அவர் தான். அவர் வருகைக்காக - அழகு தமிழ் பேச்சுக்காக மக்கள் காத்திருப்பார்கள்.

இதோ சொல்லின் செல்வர் அண்ணன் இராஜதுரை அவர்களது கார் வந்து விட்டது. மேடையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார் என்ற அறிவிப்புக்கள் வந்து கொண்டிருக்க மக்கள் கரகோஷம் செய்து ஆர்ப்பாரிப்பார்கள்.
மேடையில் ஏறியவுடன் அண்ணன் இராஜதுரை பேசத் தொடங்குவார். மட்டக்களப்பு மண்ணில் ஒரு சில இனப்பகைவர்கள் - இன ஒற்றுமையைக் குலைப்பவர்கள் மட்டகளப்பான் - யாழ்ப்பாணத்தான் என்ற பிரதேசவாதத்தை கிளப்பி அரசியலில் குளிர்காய நினைப்பவர்களை மட்டக்களப்பின் அந்த ஆலமரத்தடியில் ஆழக்குழி தோண்டி நீளப் புதைத்து விட்டு வருவதால் காலதாமதமாகி விட்டது என்று தனது உரையை ஆரம்பிப்பார். மக்கள் அவரது பேச்சில் அப்படியே கட்டுண்டு போவார்கள்.
அப்படிப்பட்ட ஓர் மகத்தான தலைவராக விளங்கிய அண்ணர் இராஜதுரை அவர்களது அரசியல் வாழ்க்கையிலும் அரசியல் சூறாவளி வீசியது தமிழ்மக்கள் செய்த துர்திஷ்டமே. எதுவாக இருந்தாலும் மட்டுநகர் மக்களின் இதய சிம்மாசனத்தில் காலத்தால் அழியாது வீற்றிருந்தவர் அவர்.
பிரதேசதவாதத்தை வேரறுத்த ஓர் பெருமகன் இன்று தன் மூச்சை நிறுத்திக் கொண்டு விட்டார். காலத்தால் மறக்க முடியாத அண்ணர் செல்லின்செல்வர் இராஜதுரை அவர்களுக்கு ஈழநாடு பத்திரிகை வாசகர்கள் சார்பிலும் எனது சார்பிலும் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்!
- T.K..பரமேஸ்வரன் - ஆசிரியர் ஈழநாடு
 

 

Leave a Reply