அண்ணாத்துரை அறிஞர் அண்ணா ஆனது எப்போது தெரியுமா?!
சினிமா
அறிஞர் அண்ணாவின் நாவன்மை: "கதர் கட்டுபவன் தான் தேசபக்தனா?"
அறிஞர் அண்ணாவின் தோழராகவும் அவ்வப்போது காரோட்டியாகவும் இருந்தவர் எஸ்.எஸ்.பி. லிங்கன்.
ஒரு நாள், வழியில் ஒரு பொதுக்கூட்டம் - கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் - நடந்து கொண்டிருந்தது. அண்ணாவைத் தாக்கிப் பேசுகிறார் பேச்சாளர். அண்ணா காரிலேயே உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். லிங்கத்தால் பொறுமையாக இருக்க முடியவில்லை. "போகலாம், அண்ணா..." என்றார்."சரி, போகலாம்.."என்றார்.
போய்க் கொண்டே இருக்கும் போது, லிங்கம் அண்ணாவிடம்..."அவர்களுடைய கொள்கைகளைத்தானே நாமும் சொல்கிறோம். அப்படி இருக்க, நம்மையே தாக்குகின்றனரே... ஏன்?" என்று கேட்டார்.
அதே சமயம், வரிசையாகச் செல்லும் இரட்டை மாட்டு வண்டிகளைக் கடந்து, லிங்கம் கார் ஓட்டிச் செல்ல நேர்ந்தது. ஹாரன் அடித்து ஓவர் டேக் செய்தார். அப்போது ஒரு வண்டிக்காரன், "மெதுவா போங்கடா... கழுதைகளா!" என்று, கார் ஓட்டி வந்த லிங்கத்தைத் திட்டினான்.
இதைக் கண்ட அண்ணா, "வண்டிக்காரன் ஏன் உன்னைத் திட்டினான்? அவனுக்கு பாதை விட்டுத் தான் நீ முந்திக் கொண்டு வந்தாய். அப்படி இருக்க, அவன் உன்னைத் திட்ட என்ன காரணம்?"என்று கேட்டார்; லிங்கத்துக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.
அண்ணாவே சொன்னார்: "அவன் மெதுவாகப் போகிறானாம். அவனை விட நீ வேகமாகப் போகிறாயாம். அவனை முந்திக் கொண்டு நீ போவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் வேகத்துக்கு, அவன் பின்னால் உன்னை வரச் சொல்கிறான். மாட்டு வண்டி வேகத்துக்கு மோட்டார் வண்டி போக முடியுமா? கம்யூனிஸ்ட்களை விட, நம் கட்சி வேகமாக வளர்கிறது. அதனால் திட்டுகின்றனர், வண்டிக்காரன் உன்னை திட்டியதைப் போல.."என்றார்.
அறிஞர் அண்ணா 1963-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். நாடாளுமன்றத்தில் 'சென்னை மாகாணம்' என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்திடக்கோரும் தீர்மானம் ஒன்றின் மீது அவர் பேசினார். காங்கிரஸ் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. பொள்ளாச்சி மகாலிங்கம் என்ற உறுப்பினர், "தமிழ்நாடு எனப் பெயர் மாறினால் நீங்கள் என்ன லாபம் அடைந்து விடப்போகிறீர்கள்?" என்று கேட்டார்.
“நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கிறீர்களே, இதனால் நீங்கள் கண்ட லாபம் என்ன?” என்று அண்ணா கேட்டதும், காங்கிரஸ் உறுப்பினரிடம் இருந்து பதிலேதும் இல்லை!
அண்ணாவின் பேச்சுக்கு யாரும் அவ்வளவு எளிதில் மறுத்துப்பேசிவிடமுடியாது. வலுவான வாதங்களை வைப்பதில் சமர்த்தர் அவர். ஒருமுறை பெரியாரைக் காண சுதேச கிருபளானி வந்தார். அந்த வார “ரிவோல்ட்” இதழில் கதர் கட்டுவது மூடநம்பிக்கை எனப் பொருள்படும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் பெரியார்.
இதைக் குறிப்பிட்ட கிருபாளினி," நீங்கள் ஒரு காங்கிரஸ்காரராக இருந்து தெருத் தெருவாக கதரைச் சுமந்து விற்று கட்சியை வளர்த்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது இப்படி எழுதுவது தவறு!" என்றார். அதற்குப் பதில் கூற முயன்ற பெரியாரின் பேச்சை மறுதலித்து, தொடர்ந்து கிருபளானி ஆவேசத்துடன் பேசவே, குறுக்கே புகுந்த அண்ணா, "'விபூதி அணிந்தவன் சிவபக்தன். நாமம் போட்டவன்தான் வைணவன்!' என்று சொல்லும் நம்பிக்கை போன்றதுதான் கதர் கட்டுபவன்தான் தேசபக்தன் என்பது" என்று ஒரே போடாகப் போட, அமைதியானார் கிருபளானி. அதுதான் அண்ணாவின் நாவன்மை!
ஓர் இரவு நாடகத்தின் பவளவிழாவிற்கு தலைமை வகிக்க வந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தன் பாராட்டுரையில் அண்ணாவை ‘அறிஞர்' அண்ணாத்துரை என்று குறிப்பிட, பின்னாளில் அறிஞர் என்றாலே அண்ணா என்றானது!
நன்றி:- Saravanan M






















