• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜி கணேசனின் வெறித்தனமான நடிப்புப் பட்டறை! கவுண்டராய் வாழ்ந்த அந்த கம்பீரம்... 

சினிமா

சிவாஜி கணேசனின் வெறித்தனமான நடிப்புப் பட்டறை! கவுண்டராய் வாழ்ந்த அந்த கம்பீரம்... இதுதான் கொங்கு மண்ணுக்கே உரிய மரபு.
"மணப்பாறை மாடுகட்டி"ன்னு அப்போ உழவனுக்குப் பெருமை சேர்த்தாங்கன்னா, இப்போ இந்த "சிங்காரச் சிட்டுத்தான்" பாட்டு நம்ம புள்ள குட்டிக்குக் கொஞ்சு மொழியிலே பெருமை சேர்க்குது. வட்டாரப் பாஷை பாடணும்னா, ஒண்ணு அது கேலி ஆகிடும், இல்லைன்னா ரொம்ப டல் அடிக்கும். ஆனா, இந்த இடத்திலே குரலும் நடிப்பும் சேர்ந்து விளையாடுது.
பாட்டு ஆரம்பிக்குது. நடு ஹால்ல ஊஞ்சல், கே.ஆர்.விஜயா குழந்தையை ஊஞ்சல் ஆட்டிட்டுப் பாடுறாங்க. "சிங்காரச் சிட்டுத்தான் என்ட புள்ளே..."ன்னு தாயின் பாசம் பொங்குது.
அந்த நேரம் பாத்து, சிவாஜி சும்மா தள்ளி நிக்கிறாரா? இல்லை!
சின்னதா வலது தோளை அசைச்சு,
மெல்லத் தலையை ஆட்டி,
வலது கையை இடுப்பிலே வெச்சு...
இந்தச் சின்ன அசைவு இருக்கு பாருங்க! இமை மூடித் திறக்குறதுக்குள்ள முடிஞ்சுடும் அந்த ஷாட். ஆனா, அதுக்குள்ளேயும் அவர் தன் இருப்பைக் காட்டுற அந்த 'டச்' இருக்கே... "அதுதான்யா நடிகர்திலகம்..
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் வார்த்தைப் போர்!
சுற்றத்தினர் உசுப்பேத்தி விட, "இனி என் முறை"ன்னு சிவாஜி கெத்தா நடந்து போவாரு. அந்த நடையைப் பாத்துத்தான் தியேட்டரில் கைதட்டல் காது கிழியும்!
அவர் ஆரம்பிக்கிறார்:
"அட நீ என்ன தாயாரு நான் தான்டி அப்பேன்..."
பார்த்தீங்களா, "நான் தான் அப்பா"ன்னு சொல்ற இடத்துல, கிராமத்து ஆண்மகனோட கர்வத்தை அப்படியே காட்டுவாரு. "என் பேர் சொல்லும் வாரிசு"ன்னு சொல்ற அந்தப் பெருமிதம்... இதைப் பார்க்கிற ஆம்பளைங்க எல்லாரும் சபாஷ் போடுவாங்க!
தாய்க்குலம் விடுவாங்களா?
கே.ஆர்.விஜயா உடனே திருப்பி அடிக்கிறாங்க:
"பூமி வளமில்லாமே வெத என்ன ஆகும்... தாய் தானே முன்னாலய்யா!"
அடடா! சவுக்கடி! "என்ன செய்ய, இந்தச் சாமி துணையா நிக்குதே"ன்னு தகப்பன் குலம் கொஞ்ச நேரம் தலை சுத்தி நிக்கும். ஆனா, அப்புறம் மீண்டும் வந்து, "பாருங்க, என் ராசா என்னை மாதிரியே இருக்கான்!"னு மறுபடியும் வாய்ஜாலம் செய்வாரு.
ஆனா, கடைசியில பாசம் ஜெயிக்கும்! சண்டையைப் பெருசாக்காம, "என்ட புள்ளே"ன்றது "அம்மபுள்ளே"ன்னு சமாதானமாகி, தாலாட்டு பாடி முடிப்பாங்க. நல்ல குடும்பம்னா விட்டுக் கொடுக்கணும்ல!
வயல்வெளியில் காதல் விளையாட்டு...
அடுத்து, நம்ம மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்து வயல்வெளியில் ஒரு சீன். பசுமை நிறத்து வயல்ல, நீல சட்டையும் வெள்ள வேட்டியுமாய் சிவாஜி.

அம்மா கஞ்சிக்கலயமும் குழந்தையுமா நடந்து வர்றதைப் பார்த்ததும் நம்ம ராஜாவுக்கு உற்சாகம் வந்துடும்.
"கஞ்சிக்கலயம் கொண்டு வார புள்ளே... கட்டாக நீ இருக்க ரெண்டு புள்ள!"ன்னு கிண்டலாப் பாடுவாரு.
"ஐயோ! அத்தோடு நிற்கட்டும் நம்ம எல்ல... அடுத்தொண்ணு பொறந்துட்டா ரொம்ப தொல்ல"...
அப்புறம் சிவாஜி சமாளிச்சுப் பேசுவாரு... இந்தச் சீன்லதான் அப்படியே வேட்டியைத் தூக்கிப் பிடிச்சு வயக்காட்டுல அவர் ஆடுற அந்த டான்ஸ் மூவ்மென்ட்... அடடே, கிடைச்ச கேப்ல புகுந்து விளையாடியிருப்பாரு. சும்மா ரெண்டே ஸ்டெப்தான், ஆனா தியேட்டரையே ஆட வச்சிருவாரு!
தகப்பனின் உச்சகட்ட சந்தோஷம்
குழந்தை கொஞ்சம் பெருசாகி, முதன்முதலா "அப்பா"ன்னு கூப்பிடும்போது, ஒரு தகப்பன் மனசு எப்படி இருக்கும்?
சிவாஜி , அந்தக் கிராமத்துப் பாமரனோட உணர்ச்சியை அப்படியே வெளிப்படுத்துவாரு: *"அட்ரா சக்கன்னானா ஓஹோய்!"ன்னு கத்தி, ஒத்தக்கால்ல குதிச்சு அவர் போடும் அந்த ஆட்டம் இருக்கு பாருங்க! அதுதான் உண்மையான சந்தோஷம்!
"நாலும் படிக்கப் போறான் நல்லா வளந்தே"ன்னு ஆசையாப் பாடி, சுபமா முடிப்பார்.
நடிப்பு, கிராமிய வாசம், பாட்டு – இந்த மூணும் சேர்ந்து ஓடுற குதிரை இந்த பாட்டு..

 

செந்தில்வேல் சிவராஜ்

Leave a Reply