புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி அறிஞர் அண்ணா போற்றுவது.......
சினிமா
ஒரு முறை தென் மாவட்டங்களில் சிறப்புரை நிகழ்த்திவிட்டு, அறிஞர் அண்ணா காரில் வந்து கொண்டிருக்கிறார். பயணக் களைப்பைப் போக்கிக் கொள்வதற்காகக் காரிலிருந்து இறங்கி சாலையோரத்தில் நிற்கிறார்.அந்த வழியே வந்து கொண்டிருந்த விவசாயக் கூலிப் பெண்கள் அண்ணாவின் காரைப் பார்க்கிறார்கள். நாடோடி மன்னன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். காட்டிய அதே கொடி அண்ணாவின் காரிலும் பறக்கிறது. அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள்: "நீங்கள் எங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா?” அண்ணா அவர்கள் புன்னகை ததும்பப் பதிலளிக்கிறார்; "ஆம், நான் உங்கள் எம்.ஜி.ஆர். கட்சிதான்!” இந்த நிகழ்ச்சியை விவரித்து ‘தம்பிக்கு' எழுதிய கடிதத்தில் "அந்தப் பெண்கள் நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா என்று கேட்டபோது நான் அளவில்லா மகிழ்ச்சியுற்றேன். நாம் செல்லாத ஊர்களுக்கும், நம்மை தெரியாத பாமர மக்களிடத்திலும் எம்.ஜி.ஆர். நமது கொடியைக் கொண்டு சென்றிருக்கிறாரே என்று வியந்து போனேன். உச்சிப் பொழுதிலும், நாம் உறங்கும் வேளையிலும்கூட எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் நமது கருத்துக்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது உண்மையல்லவா....” என்று குறிப்பிட்டிருக்கிறார் அண்ணா .
"திமுக என்றால் எம்.ஜி.ஆர்.; எம்.ஜி.ஆர். என்றால் எங்கள் வீட்டுப் பிள்ளை " இதுதான் கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் அபிப்பிராயம். இதைப் புரிந்து கொண்டதால்தான், 'யாருக்கும் கிடைக்காத கனியொன்று மரத்தில் பழுத்துத் தொங்கியது. யார் மடியில் விழுமோ என்று எல்லோரும் ஏங்கித் தவித்தபோது, அக்கனி என் மடியில் விழுந்தது. மடியில் விழுந்த கனியை என் இதயத்தில் பத்திரமாக வைத்துக்கொண்டேன்' என்று அண்ணா எம்.ஜி.ஆரை கொண்டாடினார்.1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தல் தமிழக வரலாற்றில் முக்கியமான அத்தியாயமாகும். அப்போது தேர்தல் நிதியாக எம்.ஜி.ஆர். ஒரு இலட்சம் ரூபாய் தந்தபோது அண்ணா சொன்னார் : "தம்பீ, இந்த ஒரு இலட்ச ரூபாய் பெருந்தொகைதான், ஆனால் நானோ இதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறேன். மக்களுக்கு உன் முகத்தைக் காட்டு, அது பல இலட்சம் வாக்குகளைப் பெற்றுத்தரும்!” என்றார். அந்தத் தேர்தலின்போது தான் தமிழகத்தை உலுக்கிய துயரச் சம்பவம் நடந்தது. இளைஞர்கள் கொதித்தார்கள்; தலைவர்கள் திகைத்தார்கள்; பெண்கள் அழுது புலம்பினார்கள்; ஆம், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்.அண்ணா கேட்டுக்கொண்டபடி எம்.ஜி.ஆர். தனது முகத்தை மக்களுக்குக் காட்ட முடியவில்லை . ஆனால், குண்டடிபட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட அவருடைய படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள், தமிழ்நாடு எங்கும் ஒட்டப்பட்டன. பார்த்துப் பதறிய மக்கள் தி.மு.க.விற்கு வாக்குகளை அள்ளிக் குவித்தார்கள். கூட்டணிக் கட்சிகளும் மகத்தான வெற்றி பெற்றன. வெற்றிக்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில், அண்ணாவிற்கு மாலை அணிவிக்கச் சென்ற மக்களிடம் குறிப்பாக கே.ஏ.மதியழகன் ஊரான கணியூர் மற்றும் கோவை நகரக் கழகப் பொறுப்பாளர்களிடம் “இந்த வெற்றிக்கு உரியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரால்தான் இந்த வெற்றி சாத்தியமானது. முதலில் அவருக்கு இந்த மாலையை சூட்டுங்கள்" என்று அண்ணா உணர்ச்சிபொங்கப் பேசினார்.
திமுக வளர்ந்தது, வெற்றி பெற்றது, ஆட்சி அமைத்தது எம்.ஜி.ஆரால்தான் என்பதை உணர்வதற்கு அறிஞர் அண்ணாவின் கூற்றே வரலாற்றுச்சான்று






















