தி.மு.கவிலிருந்து 1972இல் எம்.ஜி.ஆர் விலகினார்
சினிமா
தி.மு.கவிலிருந்து 1972இல் எம்.ஜி.ஆர் விலகினார். எம்.ஜி.ஆர் ரசிகனா யிருந்த நான், முரசொலியிலிருந்து விலகி அலை யோசையில் சேர்ந்தேன். அது, எம்.ஜி.ஆர் ஆதரவு இதழாக இருந்தது. அங்கிருந்தபோது பாலமுருகன் என்ற கதாசிரியரை பாடல் எழுத வாய்ப்பு கேட்டுச் சந்தித்தேன். அவர், டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தினார். மாதவன் தயாரித்த ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ படத்தில் “தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா’’ என்ற பாட்டை எழுதினேன்.
அதன்பிறகு எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அலையோசையி லிருந்து விலகினேன். அதுதெரிந்து, எம்.ஜி.ஆர் கூப்பிட்டார். “விஷயம் கேள்விப்பட்டேன். பணம் கொடுக்கிறேன். வாங்கிக்கங்க’’ என்றார். “பணம்வேண்டாம். வேலை கொடுங்க’’ என்றேன். வற்புறுத்தினார். “உங்க அன்பு போதும்’’ என்று மறுத்துவிட்டேன். அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.
‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் “கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில்’’ என்ற பாட்டில் தொடங்கினேன். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினேன்.
“இது நாட்டைக் காக்கும் கை – உன்
வீட்டைக் காக்கும் கை’’ என்ற பாடலை எம்.ஜி.ஆரே தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அமெரிக்கா நாட்டில் வெளிவரும் “வாஷிங்டன் போஸ்ட்’’ பத்திரிகை என்னையும் அந்தப் பாடலையும் குறிப்பிட்டு இத்தகைய பாடல்களைப் பாடி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் என எழுதியது. அவர் தம் சொந்தத் திறமையாலேயே ஆட்சிக்கு வந்தார். ராமருக்கு அணில்போல வேண்டுமானால் என் பங்கு இருக்கலாம்......முத்துலிங்கம்.






















