மக்கள் திரையில் நாகேஷை பார்த்த நிமிசம் சிரித்திருக்கிறார்கள்
சினிமா
திருவிளையாடல் பட ஷட்டிங், சிவாஜி சார் மேக்கப் போட்டு சிவனாக ரெடியாகி காத்துகிட்டு இருக்காரு .நாகேஷ் வரலை. லேட்டா வந்தாரு. சிவாஜிக்கு கோபம் அதை காட்டி காட்டிகிடாம ஷாட் ரெடியானு கேட்டாரு. தருமியாக நாகேஷ் சிவன் பின்னாடி நடந்து போற மாதிரி சீன்.
சிவாஜி கம்பீரமா நடக்கிறாரு. பின்னாடி நாகேஷ் உடம்பை வளைச்சி தரையில விழந்துட போறவரு மாதிரி நடக்க தன் பின்னாடி நாகேஷ் ஏதோ காமெடி பண்றாருனு சிவாஜிக்கு புரியுது. ஆனா திரும்பி பார்க்க முடியலை, மேல இருந்த லைட்மேன்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.ஷாட் முடிஞ்சதும் நினைச்சி நினைச்சி சிரிச்சோம். எப்பேர்பட்ட நடிகர் நாகேஷ் என உணர்ச்சிவசப்பட்டு சொன்னார்.
அப்படித்தானிருந்தது நாகேஷின் காலம். அவர் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த நாட்களில் ஒய்வின்றி நடித்திருக்கிறார். மக்கள் திரையில் நாகேஷை பார்த்த நிமிசம் சிரித்திருக்கிறார்கள்.
இன்று பல நகைச்சுவை நடிகர்களை குரலால் பாவனை செய்துவிட முடியும். மிமிக்ரி செய்பவர்கள் அதை சாதித்து காட்டுகிறார்கள். நாகேஷை அப்படி மிமிக்ரி செய்பவர்களை நான் கண்டதேயில்லை. காரணம் நாகேஷை குரலால் மட்டும் பாவனை செய்துவிட முடியாது. நாகேஷாக பாவனை செய்ய நாகேஷாகவே மாறவேண்டும், உடல்மொழி வேண்டும்,வேறு வழியேயில்லை.
தமிழ் சினிமாவில் தனித்த ஆளுமையாக இருந்த போதும் நாகேஷ் தேசிய அளவிலான எந்த அரசு அங்கீகாரமும் கிடைக்காமல் போன கலைஞனே.
அவரது நகைச்சுவை இயல்பானது. அது நினைத்து நினைத்து சிரிக்க கூடியது. அடுத்தவரை புண்படுத்தாதது. துளியும் ஆபாசமற்றது.
நாகேஷின் மெலிந்த உடல் தான் அவரது பலம். ஒரு படத்தில் வில்லன் அவரை பார்த்து " கொத்தவரங்காய் மாதிரி உடம்பை வச்சிகிட்டு எவ்வளவு வேலை காட்டுறே " என்று கேட்பார். அது தான் நிஜம். தன்னியல்பாக அவருக்குள் நகைச்சுவை உணர்வு இருந்தது. அதை அவர் வெளிப்படுத்தும் பாங்கு அற்புதமானது. திருவிளையாடல் தருமியும், தில்லானா மோகனாம்பாள் வைத்தியும், சர்வர் சுந்தரமும், என எத்தனையோ மறக்கமுடியாத நகைச்சுவை பாத்திரங்கள்.
நாகேஷின் நகைச்சுவை உணர்வை மட்டுமின்றி அவருக்குள் இருந்த அற்புதமான நடிப்பு திறனை முழுமையாக வெளிப்படுத்தியவர் கே. பாலசந்தர். இந்த இருவரின் கூட்டணி தமிழ் சினிமாவில் உருவாக்கிய புத்துணர்ச்சி இன்றும் வியப்பளிக்க வைக்கிறது. குறிப்பாக மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், பாமா விஜயம் அனுபவி ராஜா அனுபவி, நீர்குமிழி, என்று எத்தனை வெற்றிபடங்கள்.
பாலசந்தருக்கு அடுத்தபடியாக நாகேஷை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர் கமலஹாசன். கமலோடு நாகேஷ் நடித்த படங்களில் நாகேஷின் நகைச்சுவை அற்புமாக அமைந்திருந்தது. நாகேஷை வில்லனாக மாற்றிய அபூர்வ சகோதரர்கள், பிணமாக நடித்த மகளிர் மட்டும் , அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம் உள்ளிட்ட எத்தனையோ படங்கள் நாகேஷிற்கு நடிப்பின் புதிய பரிமாணங்களை உருவாக்கியது.
சிரிப்பின் உச்சம் அழுகையில் முடியும் என்பார்கள். தனது துயரங்களுக்கான அழுகையை சிரிப்பாக மாற்ற தெரிந்தவனே உயர் கலைஞன். நாகேஷ் அதற்கொரு தனி அடையாளம்.
- ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் உதயம் இதழில் வெளியான கட்டுரை





















