• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிகரம், இமயம், திலகம் என்று எதைச் சொன்னாலும் கட்டுக்குள் வராத பிரமாண்ட நாயகன் சிவாஜிகணேசன்.

சினிமா

கிட்டப்பாக்கள், சின்னப்பாக்கள், பாகவதர்கள் எனும் காலத்துக்குப் பிறகு, ஒரு நடிகருக்கு முதல் தேவை உடல்மொழி என்கிற பாடிலாங்வேஜ் என்பதை, படத்துக்குப் படம், காட்சிக்குக் காட்சி நிரூபித்து உணர்த்திய உன்னதக் கலைஞன் சிவாஜி என்பதை வரலாறு சொல்கிறது.

போடாத வேஷமில்லை. ஏழை, பணக்காரன், காதலன், கணவன், ராஜா, மந்திரி, புலவர், அப்பாவி என்று சாதாரணமாகப் பட்டியலிட்டுவிடமுடியாது. ஏழை என்றால் எதுமாதிரியான ஏழை. ஒவ்வொரு விதமான ஏழைக்கென, உடல்மொழியையே உடையாக மனதில் தைத்துப் போட்டுக்கொள்ளும் மகாகலைஞன். பணக்காரன் என்றால், கர்வமான பணக்காரனா, குடிகார பணக்காரனா, அன்பான பணக்காரனா... அதற்குத் தகுந்தமாதிரி, சிவாஜி எனும் ஐந்தடி உயரக்காரர், ஆள்மாற்றுகிற ரசவாதமெல்லாம் இந்தியதுணைகண்டம் வரை தேடினாலும் கிடைக்காதது!

பார்மகளே பார் படத்திலும் பணக்கார சிவாஜிதான். உயர்ந்த மனிதனிலும் அப்படித்தான். வசந்தமாளிகையிலும் ஒருவித பணக்காரர்தான். அவன்தான் மனிதன் பணக்காரனும் வேறுவகைதான். ஆனால், ஒரு பணக்காரக் கேரக்டரை இன்னொரு பணக்காரத்தனத்துக்குள் புகுத்தமாட்டார் என்பதுதான், சிவாஜியின் தனி ஸ்டைல்.

எந்நேரமும் போதையில் இருப்பது மாதிரியே இருப்பார், வசந்தமாளிகையில். எப்போதும் அன்பு கலந்த அப்பாவித்தனத்துடன் இருப்பார் படிக்காத மேதை ரங்கன். உள்ளம் என்பது ஆமைக்கு ஒருவிதமாக நடப்பார். ஆறுமனமே ஆறு பாடலுக்கு வேறுவிதமாக நடப்பார். மாதவிப் பொன்மயிலாள் பாட்டுக்கு தனி ராஜநடை. திருவிளையாடலில் கடற்கரையில் நடக்கும் போது அதுவொரு ஸ்பெஷல் நடை.

தெய்வமகனில் மாடிப்படி ஏறுவார். திரிசூலத்திலும் மாடிப்படி ஏறுவார். அங்கே ஒருவிதம்.. .இங்கே ஒரு ஸ்டைல் நடை. இப்படி தமிழ் சினிமாவில், இவரின் நடை, பார்வை, பேச்சு, உடல்மொழி என்று எத்தனையெத்தனை ஸ்டைல்கள். நடிப்பில் மட்டுமல்ல... சிவாஜியின் நடையைக் கூட மிஞ்ச எவருமில்லை.
 

Leave a Reply