• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..

சீனாவில் உள்ள கிராமம் ஒன்று, திருமணம் தொடர்பான விடயங்களுக்கு பல அபராதங்களை அறிமுகப்படுத்தியது விவாதங்களைத் தூண்டியுள்ளது. 

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தின் Lincangயில் ஒரு கிராமத்தில் வித்தியாசமான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இணைய பயனர்கள் தெரிவித்துள்ளனர். 

சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட புகைப்படங்களின்படி திருமணமாகாத கர்ப்பம், திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வது மற்றும் யுன்னான் மாகாணத்திற்கு வெளியே இருந்து ஒருவரை திருமணம் செய்வது போன்றவற்றுக்கு கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

திருமணம் தொடர்பான நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளதாவது, மாகாணத்திற்கு வெளியே உள்ள ஒருவரைத் திருமணம் செய்தால் 1,500 யுவான் (210 டொலர்கள்) அபராதம் விதிக்கப்படும்.

திருமணம் ஆகாமல் கருவுற்றால் 3,000 யுவான் அபராதம்; திருமணம் ஆகாத தம்பதிகள் ஒன்றாக வாழ்ந்தால் ஆண்டுதோறும் 500 யுவான் (70 டொலர்கள்) செலுத்த வேண்டும். 

திருமணமான 10 மாதங்களுக்குள் ஒரு குழந்தை (விரைவாக குழந்தை பிறந்தால்) 3,000 யுவான் அபராதம் விதிக்கப்படும்.

ஒரு தம்பதியினர் சண்டையிட்டு, சமரசம் செய்ய கிராம அதிகாரிகள் அழைக்கப்பட்டால் ஒவ்வொருவருக்கும் 500 யுவான் அபராதம் விதிக்கப்படும். 

மற்ற கிராமங்களில் மது அருந்தும்போது தொந்தரவு செய்பவர்கள் அல்லது முரட்டுத்தனமாக நடந்துகொள்பவர்களுக்கு 3,000 முதல் 5,000 யுவான் (700 டொலர்கள்) வரை அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல், கிராமத்திற்குள் வதந்திகளைப் பரப்புபவர்கள் அல்லது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுபவர்கள் பிடிபட்டால், அவர்களுக்கு 500 முதல் 1,000 யுவான் வரை அபராதம் விதிக்கப்படும். 

அந்த கிராமத்தின் மக்கள்தொகை அளவு மற்றும் பொருளாதார நிலை ஆகியவை தெளிவாக தெரியவில்லை.

என்றாலும், மெங்டிங் நகர அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் ரெட் ஸ்டார் நியூஸிடம், அந்த அறிவிப்பின் உள்ளடக்கம் "மிகவும் அசாதாரணமானது" என்றும், அது பின்னர் அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், அறிவிப்பு கிராமக் குழுவால் தன்னிச்சையாக வெளியிடப்பட்டது என்றும், அது குறித்து நகர அரசாங்கத்திடம் தெரிவிக்கவோ அல்லது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவோ இல்லை என்றும் அவர் விளக்கினார்.   
 

Leave a Reply