கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல் உத்தரவு
இலங்கை
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதூஷிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்படும் நிலையில், இன்று (28) கம்பஹா நீதவானிடம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.























