திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதை விட திரைக்கதை முக்கியம்
ஒரு நதியின் ஓட்டத்தை அது நடக்கும் வழியே சென்று பார்த்தால் பலவிதமான தோற்றங்களில் அது பயணிக்கும்.ஓரிடத்தில் அமைதியாக இன்னொரு இடத்தில் ஆர்ப்பாட்டமாக வேறொரு இடத்தில் பொங்கும் புனலாக மற்றொரு இடத்தில் கொட்டும் அருவியாக!.. ஒரே நதி தான்.அப்படித்தான் சினிமாவும்.நதியின் வேகத்தைத் தீர்மானிப்பது அந்தந்த நிலத்தின் தன்மை.அதே போல் ஒரு திரைப்படத்தின் தன்மையைத் தீர்மானிப்பது அதன் திரைக்கதை!.. எவ்வளவோ விஷயங்களை கவனிக்கும் நாம் இந்த திரைக் கதையையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்!..
ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதை விட திரைக்கதை முக்கியம்.ஐந்து பாகமாக வெளி வந்த பொன்னியின் செல்வனை அப்படியே திரைப்படமாக எடுக்க முடியுமா?. திரைக்கென்று அதனை செதுக்க வேண்டும்.எடுக்கப்போகும் காட்சிகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.காட்சிக்குத் தேவையான கலைஞர்களை மட்டுமே கணக்கிலெடுக்க வேண்டும்.எடுக்கப்போகும் சூழல் தேவையான பொருட்கள் காட்சி நேரம் காட்சி எண் என பக்காவாகத் திட்டமிடுவது தான் ஒரு திரைப்படத்தின் ஸ்கிரிப்ட். இந்த ஸ்கிரிப்ட் தான் படத்தின் உயிர் நாடி.உலகில் எந்த மொழியாக இருந்தாலும் சரி.பாத்திரங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.அதன் பின்னே பாத்திரங்களுக்கு இடையே உள்ள சிக்கல்கள்.அந்த சிக்கலைத் தீர்க்கும் நடவடிக்கைகள்.அது சுபமாக இருக்கலாம் சோகமாக இருக்கலாம்.இதை எப்படி ஆடியன்ஸூக்கு டெலிவரி செய்கிறோம் என்பது தான் திரைக்கதையின் சாகஸம்.இதை முதலில் கணித்தவர் அரிஸ்டாட்டில்.
கிரேக்க நாடகங்களில் எப்படியெல்லாம் சுவை கூட்டலாம் என்பதை எடுத்துச் சொன்னவர் அவர் தான். அவரது யுக்தியை ஆராய்ந்தே ஃபவுண்டேஷன் ஆஃப் ஸ்க்ரீன் ரைட்டிங் என்ற நூலை எழுதினார் ஸிட் ஃபீல்ட்.படமெடுக்கும் ஆசையுள்ளவர் படிக்க வேண்டிய புத்தகம்.அதன் பிறகு வில்லியம் கோல்ட்மென், ராபர்ட் மெக்கீ, ஜான் ட்ரூபி ,கிரிஸ்டோபர் வோக்ளர் என பல திரைக்கதை பிதாமகன்களை இந்த உலகம் கண்டிருக்கிறது.இந்திய சினிமாவும் ஊமைப் பட காலம் தொட்டே திரைக்கதைக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறது.ஆரம்பத்தில் திரைக்கதை என்ற ஒன்று டைட்டிலில் இருக்காது.வெறும் வசனம் தான்.முதன் முதலில் தமிழ் சினிமாவில் திரைக்கதைக்கு முக்கியத்துவம் தந்தது ஒரு பெண் என்றால் நமக்கெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும்.1936 ல் வெளியான மிஸ் கமலா என்ற படத்தில் திரைக்கதையை செம்மையாக வடிவமைத்தவர் அதன் இயக்குநரான டி.பி.ராஜலட்சுமி என்ற சினிமா ராணி.மிஸ் கமலா அவரது மகளின் பெயர்.மொத்த சினிமாவையும் தனது தலையில் சுமந்த முதல் பெண்மணி அவர் தான்.அதன் பிறகு தான் எல்லிஸ் ஆர்.டங்கன் திரைக்கதை என்றால் என்ன என்பதை நமக்கு கற்றுத் தந்தார்.அதே 36 ல் வெளியான இரு சகோதரர்களில் டைட்டில் திரைக்கதையைக் காட்டியது.எஸ்.டி.எஸ்.யோகி தான் அந்த சகோதரர்களின் ஸ்கிரிப்ட் ரைட்டர்.அதன் பிறகு தான் சினிமா பரபரப்பானது.
மூன்று தீபாவளிகள் கண்ட ஹரிதாஸில் அதன் நாயகனை ஆர்பாட்டமாக அறிமுகம் செய்து வைப்பார்கள்.தியேட்டரே உற்சாகமாகும்.அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்கி உள்ளே வரும் ரசிகனுக்கு அந்த உற்சாகம் தேவைப்பட்டது.கடைசி வரை வரும் ரசிகனை அதே உற்சாகத்தோடு உட்கார வைக்க திறமையான ஸ்கிரிப்ட் ரைட்டரால் முடிந்தது.நாயகன் அறிமுகம்.அவனது கேரக்டர் அறிமுகம்.அடுத்தடுத்த பாத்திரங்கள் அறிமுகம்.அவர்களது பிரச்சனைகள் அலசல்.கடைசியில் தீர்வு.திரைக்கதையின் போக்கிலேயே போகாமல் கொஞ்சம் மாற்றி யோசிக்க அந்த நாள் மாதிரியான புதுமைகளையும் தமிழ்த் திரையுலகம் சந்தித்தது.அந்த நாள் தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான மைல் கல்.எடுத்தவுடனே நாயகன் கொலை!..ரசிகனுக்கு பரபரப்பு தொற்றிக்கொள்ள பாத்திரங்கள் பார்வையில் திரைக்கதை நகர்ந்தது.அகிரோ குரஸவா ஆரம்பித்து வைத்தது.50 ல் இப்படியும் கதை சொல்லலாம் என்பதை அவர் தான் ஆரம்பித்து வைத்தார்.கதை சொல்லும் பாணியில் ஃப்ளாஷ்பேக் முக்கியத்துவம் பெற்றது.இதை வைத்தே பல படங்கள் வெற்றி பெற்றன.ரசிகனின் ஆர்வத்தை அதிகப்படுத்த இத்தகைய யுக்திகள் திரைக்கதைக்கு தேவைப்பட்டன.சாதாரணமாக இருந்த கலைஞர்களை இத்தகைய யுக்திகள் சூப்பர் ஸ்டார்களாக மாற்றின.தங்களது நடிப்புத் திறமையால் திரைக்கதைக்கு மெருகேற்றிய கலைஞர்களும் உண்டு.
வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் சினிமா தத்தளித்தபோது அவற்றுக்கு கை கொடுத்தது இந்த திரைக் கதை தான்.கலை என்ற வடிவத்தைத் தாண்டி சினிமா கமர்ஷியல் ஆனபோது திரைக்கதையும் முக்கிய இடத்தைப் பிடித்தது.குறைந்த பட்ஜெட்டில் பல ஜேம்ஸ்பாண்ட் படங்களை புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர் எடுக்கத் தொடங்கியது.இந்தியின் மூன்றாம் தர சினிமா இங்கு பல இளைஞர்களுக்கு உற்சாகத்தைத் தந்தது.திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்ட ஹாலிவுட் பாணியில் காட்சிகள் நகர்ந்தன.அதற்கு நேர் மாறாக குடும்பக் கதைகளைத் தேர்ந்தெடுத்து காட்சிகளை நகர்த்தி வெற்றியும் கண்டிருக்கிறார்கள் பல இயக்குநர்கள்.அறுபதுகளின் ஆரம்பத்தில் பெண்களை திரையரங்கு நோக்கி படையெடுக்க வைத்ததில் பெரும் பங்காற்றின பல திரைக்கதைகள்.இந்த வித்தையை பல இயக்குநர்கள் அழகாக கையாண்டார்கள்.அவர்களுக்கு உதவியாக திறமையான ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் கிடைத்தார்கள்.உதாரணமாக ஜாவர் சீதாராமன் போன்ற ஜாம்பவான்கள். வங்காளத்தின் உத்தர் புருஷைப் பார்த்து பலரும் உதட்டைப் பிதுக்கினார்கள்.இதில் என்ன பெரிதாக இருக்கப்போகிறது?. ஜாவர் அதே கதையை தனது திறமையால் தொய்வில்லாமல் கொண்டு போனார்.குழந்தையும் தெய்வமும் களத்தூர் கண்ணம்மா என பல படங்களும் அப்படித் தான்.கிருஷ்ணன் பஞ்சு தொடங்கி பீம்சிங் திருலோக் ஸ்ரீதர் வரை ஸ்கிரிப்ட்டில் விளையாடிய இயக்குநர்கள் ஏராளம்.கல்யாணப் பரிசில் கதை சொன்ன விதத்திற்காகவே ஸ்ரீதர் கொண்டாடப்பட்டார்.அவரது எதிர்பாராதது ஸ்கிரிப்ட் அருமையாக வந்திருக்கும்.அமர தீபம் உத்தம புத்திரன் என ஆரம்ப ஸ்ரீதர் போகப்போக கதை சொல்லும் விதத்தில் நம்மை வியக்க வைத்தார்.எதார்த்த சினிமா வணிகத்தை நோக்கி முன்னேற இத்தகைய திரைக்கதைகள் தேவைப்பட்டன.இயக்குநர் கொண்டாடப்பட அதன் மூலம் நாயகர்கள் இன்னும் அதிகமாக கவனிக்கப்பட்டார்கள்.
மக்கள் திலகத்திற்கு ஒரு தனி ஸ்கிரிப்ட். நடிகர் திலகத்திற்கு கதை சொல்லும் பாணி வேறு.காதல் மன்னனுக்கு இன்னொரு பாணி.ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்ள வியாபார தந்திரங்களுக்கு விதவிதமாக உட்கார்ந்து யோசித்தார்கள்.மக்கள் திலகம் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது தான் நாடோடி மன்னன் ஸ்கிரிப்ட். உட்கார்ந்து ஒரு கூட்டமே யோசித்து பின்னப்பட்டது அதன் திரைக்கதை. இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்படியொரு சூழல் எழுந்தது.உலகம் சுற்றும் வாலிபன் என்ற அருமையான ஸ்கிரிப்ட் கிடைத்தது.அதன் திரைக்கதையை மணிக்கணக்காகப் பேசலாம்.அப்படித் தான் அடிமைப் பெண்ணில் அசத்திய அதே திறமையான கதை சொல்லும் யுக்தி.நாம் யோசிக்காத தளத்திலிருந்து யோசித்திருப்பார்கள்.அவரது அசத்தலான ஸ்கிரிப்ட்டுக்கு இன்னொரு உதாரணம் இதயக்கனி.பணக்கார நாயகன் ஒரு அன்னக்காவடி அனாதைப் பெண்ணுக்கு வாழ்வளிக்கிறான் என்பதில் தொடங்குகிறது இதயக்கனி திரைக்கதை. அவனொரு துப்பறிவாளன் என்பது அடுத்த முடிச்சு.அவனிடம் வரும் கொலை வழக்கு.அதன் முக்கியக் குற்றவாளி அதே அன்னக்காவடி.பரபரப்பாக தொய்வின்றி நகரும் இதன் திரைக்கதை இன்று வரை நமக்கு ஆச்சரியம். இதே பாணியில் ஏற்கனவே பல துப்பறிவுகளைப் பார்த்திருந்தாலும் தமிழ் சினிமாவிற்கு இது புதுமையான ஸ்கிரிப்ட்.
அன்பே வா சாந்தி நிலையம் போன்ற ஸ்கிரிப்ட் வகைகள் ஹாலிவுட்டிலிருந்து பெறப்பட்டாலும் நமது பண்பாட்டிற்கு சற்றும் மாறுபடாமல் அவைகளைக் கொண்டு சென்ற விதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.விறுவிறுப்பான கதைகளுக்கு மத்தியில் காமெடியிலும் கதை சொல்ல முடியும் என்பதை நிரூபித்தது ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைக்கதை.ஆள் மாறாட்ட சப்ஜெக்டில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இதன் கதைக் களம் அமைக்கப்பட்டிருக்கும்.இதே யுக்தியைத் தான் ஸ்ரீதர் தனது ஊட்டி வரை உறவிலும் கடைபிடித்தார்.இடம் மாறும் பாத்திரங்களில் கலகலப்பாக நகரும் இதன் திரைக்கதை.இசையும் இதற்கு அழகாக ஒத்துழைப்புத் தந்திருக்கும். காமெடிக்கென்று ஒரு கலைஞன் இல்லாமல் அனைத்து பாத்திரங்களும் காமெடியாகவே படைக்கப்பட்டிருக்கும் புதுமையை இந்த இரண்டு படங்களிலும் புகுத்தி வெற்றி கண்டிருப்பார் இயக்குனர் ஸ்ரீதர்.நாயகர்களுக்காக கதையைத் தேடாமல் கதைக்காக நாயகர்களைத் தேடிய அற்புதமான ஸ்கிரிப்ட் ரைட்டர் ஸ்ரீதர்.
விதவிதமான திரைக்கதைகளில் நம்மை வியக்க வைத்த இன்னொரு படைப்பாளி கே.பாலச்சந்தர். திரைக்கதையின் இன்னொரு பக்கத்தைக் காட்டியவர் கே.பி.அவரது மேஜர் சந்திரகாந்த் ஒரு அட்டகாசமான ஸ்கிரிப்ட். அதே பாணியில் அவர் தந்த நாணல்.மிக்கி மௌஸ் பாணியில் திருடன் போலீஸ் விளையாட்டு.காட்சிகளை நேர்த்தியாக கொண்டு செல்லும் விதம் நம்மை ஆச்சர்யப்படுத்தும்.அவரது நூற்றுக்கு நூறு திரைக்கதை சினிமாவை பயிலும் மாணவர்களுக்கு பாடமாகவே வைக்கலாம்.அப்படியொரு அருமையான ஸ்கிரிப்ட். நான் அவனில்லை திரைக்கதை இன்னொரு அழகு.மன்மத லீலை அவர்கள் மூன்று முடிச்சு நூல்வேலி என கே. பி.யின் படைப்புகளைப் பற்றி அதன் திரைக்கதைகள் நகர்ந்த விதம் பற்றி நாள் கணக்காகப் பேசலாம்.அறுபது எழுபதுகளில் திரைக்கதை வடிவம் என்பது சிலருக்கு மட்டுமே அறிந்த வித்தை.ஆனால் இன்று அதன் முக்கியத்துவம் அனைவருமே அறிந்தது.ஹாலிவுட்டில் திரைக்கதை ஆசான்கள் நாயகர்களை விட அதிகம் கொண்டாடப்படுகிறார்கள்.ஆனால் இங்கே இப்போதும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைத்தபாடில்லை.சினிமாவின் முதுகெலும்பான இந்த திரைக்கதை ஆரோக்கியமாக நடைபோட வேண்டியது திரைத் துறைக்கு அவசியம்.இப்போது வெற்றி பெறும் படங்களை உற்று நோக்கினால் இந்த உண்மை நமக்குப் புரியும்.பல புகழ் பெற்ற ஹீரோக்களை உச்சானிக் கொம்புகளில் கொண்டு போய் உட்கார வைத்த பெருமை இந்தத் திரைக் கதைகளுக்கு உண்டு!
Abdul Samath Fayaz






















