ஒவ்வொருத்தருக்கும் நன்றி - வரலட்சுமி சரத்குமாரின் நெகிழ்ச்சி பதிவு வைரல்..
சினிமா
நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமாகி இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.
தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.
இதற்கிடையே, நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் முதற்படமான 'சரஸ்வதி' மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது.
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'சரஸ்வதி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் வரலட்சுமி சரத்குமார் அறிவித்துள்ளார். படத்தின் பின்னணியில் உள்ள குழுவினரின் புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "இது ஒரு அற்புதமான பயணம்.. என் படப்பிடிப்பில் ஒவ்வொருவருக்கும், என் நடிகர்களுக்கும், என் இயக்குநர் குழுவிற்கும், எனது ஒளிப்பதிவாளர்.. தயாரிப்பு நிறுவனத்தின் ஒவ்வொரு லைட்மேனுக்கும் நன்றி.." என்று கூறியுள்ளார்.
'சரஸ்வதி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, இப்படத்தின் அப்டேட்டுகள் இனி நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






















