கடலில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை
இலங்கை
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அது மேற்கு – வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதனால், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பேருவளையிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.
கடல் நிலை:
பேருவளையிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல).






















