மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்
இலங்கை
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் திரேஸா மகானி (Theresa o mahony) இன்றைய தினம் (24) மன்னாருக்கு வருகை தந்த நிலையில்,மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் திரேஸா மகானி மற்றும் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
அதன் போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக அவர் கேட்டறிந்தார்.
குறிப்பாக வட மாகாண ரீதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
மேலும் மன்னாரில் அபிவிருத்தி என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வரும்,காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடி உள்ளதோடு,மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ பொலிஸ் சோதனை சாவடி தொடர்பாகவும், இதனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.























