• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொலிவியாவில் சரக்கு விமான விபத்தில் 15 பேர் பலி

பொலிவியா தலைநகர் லா பாஸ் அருகே எல் ஆல்டோ பகுதியில் நிகழ்ந்த சரக்கு விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் லா பாஸ் அருகே எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்நாட்டு விமான படைக்கு சொந்தமான ஹெர்குலஸ் ரக சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது.

ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற அந்த விமானம், தீப்பிடித்து எரிந்தபடி அருகில் இருந்த நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது. இதில் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயம் அடைந்தனர்.

பலியானவர்களில் விமான ஊழியர்களும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் அடங்குவர். காயம் அடைந்தவர்கள் மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் பொலிவிய மத்திய வங்கியின் புதிய கரன்சி நோட்டுகள் பிற நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. விமானம் மோதிய வேகத்தில் அந்த பெட்டிகள் உடைந்து, சாலை மற்றும் அருகில் இருந்த வயல்வெளிகள் முழுவதும் ரூபாய் நோட்டுகள் சிதறின.

இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து காரணமாக எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
 

Leave a Reply