இனி இந்த உறவில் என்னால் தொடரமுடியாது... நடிகையின் பெயரை குறிப்பிடுவேன்... ஆனால் - சங்கீதாவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
சினிமா
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தவெக தலைவருமான விஜய் இடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் ஒன்றாக இல்லை என்றும், குடும்பத்தில் பிரச்சனை என்றும் தகவல்கள் வெளியான நிலையில் இன்று அது உறுதியாகி உள்ளது. பிரபல நடிகை உடனான தொடர்பே இந்த விவாகரத்து முடிவுக்கு காரணம் என சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது;
ஆரம்பத்தில் திருமணவாழ்க்கை சுமூகமாகவும், நன்றாகவும் சென்றது. அவர் வசதியான வாழ்க்கைமுறையை கொடுத்தார். நான் எனது வாழ்க்கையை வீட்டிற்காகவும், குழந்தைகளுக்காவும், அவருடைய நலனுக்காகவும் அர்ப்பணித்தேன்.
குடும்பத்துடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றோம். நான் ஆண்டுதோறும் லண்டனில் உள்ள எனது பெற்றோரை சந்தித்துவந்தேன். அவர் என்னை திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் சென்றார். திருமண வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சனை வந்தாலும், அதனை சமாளித்து வாழ்க்கையை தொடர்ந்தோம்.
இச்சூழலில் 2021-ல் அவர் வேறு நடிகையுடன் தவறான உறவில் இருந்ததை அறிந்தேன். இது எனக்கு ஆழ்ந்த மனவேதனையும், மன உளைச்சலையும் தந்தது. இது திருமண உறவின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கைக்கு இழைத்த துரோகமாகும். நடிகை உடனான உறவை முறித்துக்கொள்வதாக என்னிடம் உறுதியளித்தப் பின்னும் எவ்வித குற்ற உணர்வும் இன்றி, மீண்டும் அந்த தவறான உறவைத் தொடர்ந்தார். இது என்னை மேலும் மேலும் வேதனைக்கு உட்படுத்தியது.
செப்டம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை வழக்கறிஞர் மூலம் பேசி பிரச்சனையை தீர்க்க முயன்றோம். ஆனால் எந்த உடன்பாடும் எட்டவில்லை. மறுபுறம் குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டு இந்த வழக்கை ஒத்திவைத்தோம்.
இதனைத்தொடர்ந்து என்னை உடல், உணர்ச்சி, மனரீதியாக ஒதுக்கிவைத்தார். என்னுடனான தாம்பத்ய வாழ்க்கையிலிருந்து முழுமையாக விலகி, சமூக மற்றும் தொழில் வாழ்க்கை என அனைத்திலும் என்னை ஒதுக்கிவைத்தார். ஒரே வீட்டிற்குள் தனித்தனியாக வாழ்ந்துவந்தோம்.
மறுபுறம் அந்த குறிப்பிட்ட நடிகையுடன் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டார். நடிகை அதுதொடர்பான படங்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவந்தார். ஆனால் அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், மறைமுகமாக ஆதரவு கொடுத்துவந்தார். இந்தப் பதிவுகள் எனக்கும், எனது குழந்தைகளுக்கும் மீண்டும் மீண்டும் அவமானத்தை தந்தது. இந்த செயல் எங்களுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை கொடுத்தது.
தேவையற்ற விளம்பரத்தை தவிர்க்கவும், அனைத்து தரப்பினரின் மாண்பை காக்கும்வகையிலும் அந்த நடிகையின் பெயரை குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். ஆனால் தேவைப்படும் பட்சத்தில் அவரை இரண்டாவது பிரதிவாதியாக சேர்ப்பேன். குறிப்பிட்ட நடிகையை 2வது பிரதிவாதியாகச் சேர்க்க நீதிமன்றம் அனுமதி அளிக்கவேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை தேவை ஏற்பட்டால் அதற்கான ஆதாரங்களையும் சமர்பிப்பேன்.
2024-ல் நடிகை மற்றும் அவர் தொடர்பான செய்திகள் அதிகம் வெளிவந்தபோது மன உளைச்சல் அதிகமானது. பொது அவதூறுகளை தவிர்க்காமல், அமைதியாக இருந்தார். வருத்தப்படுவதற்கு பதிலாக வீட்டில் எனக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தார். பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன்.
ஒவ்வொரு முறையும் தனது வழக்கறிஞர்மூலம் அவர் அளிக்கும் பதில்கள் அவரது நிதி உதவி மற்றும் மேலாதிக்கத்தையே பிரதிபலித்தன. இது எனக்கு மேலும் அவமானத்தை தந்தது. இதை ஒருபோதும் என்னால் மன்னிக்கமுடியாது, இந்த செயலை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன். தேவைப்பட்டால் அந்த கடிதங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க அனுமதி கோருகிறேன்.
எப்போதோ இந்த பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. வெறும் காகிதத்தில் மட்டும்தான் இந்த உறவு நீடிக்கிறது. மீண்டும் சரிசெய்ய முடியாத அளவிற்கு இந்த உறவு முறிந்துவிட்டது. தொடர்ச்சியான மன வேதனை, கண்ணியமின்மை, அவமானம் மற்றும் துயரத்தின் ஊற்றாக மாறியுள்ள இந்த உறவில் என்னால் இனி தொடரமுடியாது.
அவரின் தகாத உறவினால் பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ச்சியான அவமானங்கள் எழுந்தபோதும் அவரது பொது வாழ்க்கையையும், புகழையும் கருத்தில் கொண்டு, இப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். ஒருபுறம் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினாலும், மறுபுறம் அவரை நேரடியாக சந்தித்து இருவரும் கௌரவமான முறையில் பிரிந்து செல்வது குறித்து பேசினேன். இதில் கடைசி முயற்சி 09.11.2025 அன்று நடைபெற்றது. எனது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனவேதான் இந்த நீதிமன்றத்தை நாடி விவாகரத்துக் கோருகிறேன். இந்த முழுவழக்கு விசாரணையும் கேமராவில் பதிவுசெய்யப்படவேண்டும். யூடியூப், ஃபேஸ்புக் போன்ற எந்த சமூக ஊடங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கும், அச்சு ஊடகங்களிலும் எங்கள் விவாகரத்து தொடர்பான செய்திகளை வெளியிடவேண்டும் எனவும் கேட்டுகொள்கிறேன்.
மேலும் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் திருமண வீட்டில் வசிக்கும் உரிமையை எனக்கு வழங்கவேண்டும். அவரது வருமானம், சமூக அந்தஸ்துக்கு ஏற்ப நியாயமான மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணைக்காக செலவுகளையும் அவரே ஏற்க உத்தரவிடவேண்டும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.






















