• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை நிலைவரம் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் தீவிர விவாதம்

இலங்கை

"ஒரு நாட்டில் யுத்தம் முடிவுக்கு வருவதை, அந்த நாட்டில் நிலவும் மோதல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருத முடியாது" என்று நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கம்ஷாயினி குணரத்னம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமகால நிலைவரம் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட கம்ஷாயினி குணரத்னம் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமையவே இந்த விவாதம் நடைபெற்றது.

அங்கு அவர் ஆற்றிய உரையின் தெரிவித்தாவது, "நான் 1988 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தச் சூழலில் பிறந்தேன். நான் எனது தாயின் கருவறையில் இருந்தபோது, ஒவ்வொரு முறை விமானத் தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை ஒலிக்கும் போதும், எனது தாய் கோயில்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சம் புகுவார்.

நானும் எனது தம்பியும் இலங்கையிலேயே பிறந்தோம். ஆனால், வாழ்க்கை எங்களைப் பாதுகாப்பான நாடான நோர்வேக்கு அழைத்து வந்தது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

ஆனால், யுத்தம் முடிவடைவது என்பது மோதல்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டதாகப் பொருள் கொள்ளாது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள், குறிப்பாக செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் கடந்த காலத்தின் கொடூரங்களை நினைவூட்டுகின்றன.

அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரது எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தற்செயலான நிகழ்வல்ல; மாறாக பல தசாப்தங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதைகளுடன் இது தொடர்புடையது.

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் சர்வதேச மட்டத்தில் ஒரு புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்தன. குறிப்பாக, புதிய அரசு ஊழலுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடு மற்றும் அரசியல் சீர்திருத்தம் குறித்த வாக்குறுதிகள் அந்த நம்பிக்கைக்குக் காரணமாக அமைந்தன.

இருப்பினும், அந்த வாக்குறுதிகள் உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது. தமிழர் வாழும் பகுதிகளில் இன்றும் இந்துக்கோயில்கள் இடிக்கப்படுவதாகவும், பௌத்த விகாரைகள் நிறுவப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கில் புதிய மனிதப் புதைகுழிகள் கண்டறியப்படுவதும், நிலங்கள் தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதும் கவலையளிக்கின்றது என தெரிவித்தார்.
 

Leave a Reply