• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடிய எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே ஐரோப்பா விஜயம்

கனடா

கனடாவின் எதிர்க்கட்சித் தலைவரான பியர் பொய்லிவ்ரே தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

இந்தப் பயணத்தில் அவர் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்ற பின் மேற்கொள்ளும் அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இப்பயணத்தின் போது தன்னுடன் ஒத்த கருத்துக்களை பகிரும் அரசியல் தலைவர்களையும், வர்த்தக வட்டாரங்களையும் சந்தித்து, பிரதமர் மார்க் கார்னி முன்வைக்கும் அரசியல்–பொருளாதார காட்சியமைப்புக்கு மாற்றாக தனது பார்வையை முன்வைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் 1832ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியினரின் முக்கிய மையமாக விளங்கும் உறுப்பினர்களுக்கான தனியார் கழகமான கார்ல்டன் கழக வளாகத்தில் மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பொய்லிவ்ரே உரையாற்றினார்.

கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய காமன்வெல்த் நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற நிகழ்வில், முக்கிய கனிம வளங்கள், பாதுகாப்பு கொள்முதல் மற்றும் தொழில்முறை தகுதிச் சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிக்கும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இங்கிலாந்தின் லண்டனில் பணியாற்றும் ஒரு செவிலியர் அல்லது மருத்துவர், கனடாவின் ஒன்டாரியோ மாகாண லண்டனிலும் அதே தகுதியுடன் பணியாற்றக்கூடியவர்தான் என்று அவர் குறிப்பிட்டார்.

லண்டனில் பிரிட்டன் வர்த்தக சமூகத்தினருடன் சந்தித்து “Team Canada” செய்தியை பகிர்ந்ததாக பொய்லிவ்ரே சமூக வலைதளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டார். எங்கள் கூட்டாளிகளுக்கு தேவையான வளங்கள் கனடாவிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

Leave a Reply