ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்டுக்கு மிரட்டல் – 20 வயது இளைஞர் மீது குற்றச்சாட்டு
கனடா
ஒன்டாரியோ முதல்வர் மீது மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞருக்கு பொலிஸார் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
ஒன்டாரியோ மாகாணத்தின் அலிஸ்டன் (Alliston) பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர் மீது, சேதம் ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் விடுத்ததாக ஒரு குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணை கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி தொடங்கப்பட்டதாகவும், ஒன்றாரியோ பொலிஸ் பாதுகாப்பு சேவைகள் பிரிவு மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் அவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல்கள் உள்ளவர்கள் ஒன்றாரியோ பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், மிரட்டலின் தன்மை குறித்து கூடுதல் தகவல்களை வெளியிட முடியாது என ஒன்றாரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையின் நேர்மை மற்றும் எதிர்கால நீதிமன்ற நடவடிக்கைகளை பாதுகாப்பதற்காக இதுகுறித்த விவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.























