தமிழகத்தில் ஒரிஜினல் படம் வெளியாகி சக்கை போடு போட்டு மக்களின் வரவேற்பை பெற்றிருந்தால் அந்தப் படத்தை தமிழில் எடுக்க மாட்டார்கள். அப்படி எடுத்தால் அது எதிர்பார்த்த அளவு ஓடாது. யாதோங்கி பாராத் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதைத் தழுவி எடுக்கப்பட்டது நாளை நமதே. படம் விறுவிறுப்பாக ஜாலியாக இருக்கும். இந்திப் பாடல்களுக்கு சற்றும் குறைவில்லாமல் எம்.எஸ்.வி. அற்புதமாக இசையமைத்து பாடல்கள் கொடுத்திருந்தார். எல்லாப் பாடல்களும் ஹிட். ரீ ரிகார்டிங் பிரமாதமாக இருக்கும்..
படம் நிச்சயம் நன்றாகப் போயிருக்க வேண்டியது. நாளை நமதே வெளியான 50 நாளில் இதயக்கனி வெளியாகி தமிழகத்தை புரட்டிப் போட்டு அந்த ஆண்டின் ப்ளாக் பஸ்டர் படமானது. அந்த சூறாவளியில் நாளை நமதே படமும் பாதிக்கப்பட்டது. மக்கள் திலகத்தின் படத்துக்கு அவரது படம் மட்டுமே போட்டியாக இருக்க முடியும். என்றாலும், 77 நாட்கள் வரை ஓடி வெற்றி பெற்றது. இலங்கையில் நாளை நமதே 120 நாட்களுக்கு மேல் ஓடி அமோக வெற்றி பெற்றது.
எனக்குப் பிடித்த படம். விஜய் கேரக்டரை விட சங்கர் கேரக்டர் என்னைக் கவர்ந்தது. மக்கள் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு கவரும். விஜய்யாக வரும் மக்கள் திலகம் ஜாலியாக இருப்பார். ஆனால், சங்கர் அதிகம் பேசமாட்டார். சுற்றிலும் நடப்பதை உன்னிப்பாக கவனிப்பார். எதிலும் ஒரு நிதானம் இருக்கும். தனித் தனியாக நிறைய சொல்லலாம்.
ஹோட்டலில் நிர்மலாவை கண்ணன் இழுத்துச் செல்ல முயற்சிக்கும்போது என்ன தான் நடக்கிறது என்று பிஸ்கெட்டை கடித்தபடியே கூர்ந்து பார்த்து நடக்கும் அக்கிரமத்தை கவனித்து கொஞ்சம் கொஞ்சமாக கோபப்பட்டு வெறியாகி கண்ணனை புரட்டி எடுக்கும் சீன் டாப். அந்தக் காட்சியில் மக்கள் திலகத்தின் அந்தக் கூர்மையான கவனம் தான் இங்கு பதிவிட்டுள்ள படம்.
க்ளைமேக்ஸில் மக்கள் திலகத்திடம் இருந்து தப்பியோடும் நம்பியார் ரயில்வே டிராக்கில் மாட்டிக் கொள்வார். பாயிண்ட் அடிக்கும்போது தண்டவாளங்களுக்கு இடையே கால் சிக்கிக் கொள்ளும். அப்போது மக்கள் திலகம் பேசும் வசனத்தை தியேட்டரில் கேட்கவே முடியாது. திருச்சி வெலிங்டனில் முதல்முறையாக நான் பார்த்தபோது கைதட்டல், விசிலில் வசனமே கேட்கவில்லை. பிறகு ஆரவாரம் எல்லாம் ஓரளவு அடங்கிய பிறகுதான் புரிந்து கொள்ள முடிந்தது.
நம்பியாரைப் பார்த்து மக்கள் திலகம் பேசும் அந்த வசனம்..
ஓடு... உலகத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் ஓடு. உன் அதிகாரம், பதவி, பணம் எதுவும் கூட வராது. எதிலயும் மாட்டிக்க மாட்டேன்னு இறுமாப்போடு இருந்தியே. கையில் விழ வேண்டிய விலங்கை விட பலமா காலில் விழுந்திருக்கு. இப்ப என்ன சொல்ற? கூட இருந்தவனையே காரியம் முடிஞ்சதும் கேள்வி கேட்டானு கொலை பண்ண முயற்சி பண்ணியே? இப்போ உன் கணக்கு முடியப் போகுதே. மக்களே உனக்கு எதிரா சொல்ல ஆரம்பிச்சாச்சு. உன்னால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை வாசகம் நாளை நமதே...புரியுதா?


