TamilsGuide

உலகில் முதல்முறையாக பாலைவன மணலில் இருந்து சாலை- கென்யாவில் அமைக்கப்படுகிறது... 

கட்டுமானத் துறையில் நீண்டகாலமாக இருந்து வந்த ஒரு மிகப்பெரிய சவாலுக்கு ஜப்பானின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா ஒரு புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளது.

பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகளை அமைக்கும் 'ரைசிங் சாண்ட்' என்ற புதிய தொழில்நுட்பத்தை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் கட்டுமானப் பணிகளுக்காக ஆற்று மணல் மற்றும் பாறைகளை உடைத்து எடுக்கப்படும் மணல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பூமியில் அதிகளவில் கிடைக்கும் பாலைவன மணல் கட்டுமானத்திற்குப் பயன்படுவதில்லை.

இதற்கு முக்கியக் காரணம், அதன் துகள்கள் மிகவும் நுணுக்கமாகவும், உருண்டையாகவும் இருப்பதே ஆகும். இதனால் அவை சிமெண்டுடன் வலுவாக ஒட்டாமல், கட்டுமானத்தின் உறுதியைக் குறைக்கின்றன.

இந்தநிலையில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான பாத்ஏஹெட், இந்த நுண் மணல் துகள்களை ஒருங்கிணைத்து வலுவான 'செயற்கை ஜல்லிகளாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

இந்த தொழில்நுட்பம் நுண் மணல் துகள்களை சீரான மற்றும் கடினமான துகள்களாக மாற்றுகிறது. சாதாரணமான இயற்கை மணலை கொண்டு அமைக்கப்படும் சாலைகளை விட, இந்த 'ரைசிங் சாண்ட்' மூலம் அமைக்கப்படும் சாலைகள் 3 மடங்கு கூடுதல் உறுதியாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் இந்த சாலைகள் 20 ஆண்டுகள் வரை சேதமடையாமல் இருக்கும். ஆனால் தற்போதைய சாலைகளின் ஆயுள் சராசரியாக 10 ஆண்டுகள்தான். மேலும் பராமரிப்பு மற்றும் கட்டுமானச் செலவுகளை ஒப்பிடுகையில், இது சுமார் 60 சதவீதம் வரை செலவைக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment