இலங்கையின் இளைய தலைமுறையினருக்கு ‘மங்கையற்கரசி அமிர்தலிங்கம்’ என்ற பெயரைத் பெரிய அளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல தசாப்தங்களாக லண்டனில் சுய அஞ்ஞாதவாசம் செய்த அவர், பொதுமக்களின் நினைவிலிருந்து மெல்ல மறைந்து விட்டார். இருப்பினும், ஒரு காலத்தில் தமிழ் அரசியல் களத்தில் ஒரு ‘அனல்பறக்கப் பேசுபவராக ' அவர் ஆதிக்கம் செலுத்தினார். அவர் ஒரு தீவிரமான தமிழ் தேசியவாதியாகவும் பல தமிழர்களால் தமிழ் அரசியலின் ‘முதல் பெண்மணி’யாகவும் மதிக்கப்பட்டார். அதேவேளை, தீவிரவாதப் போக்குடைய சர்ச்சைக்குரிய ஒரு அரசியல்வாதியாக அவரைப் பார்த்த பெருமளவு சிங்களவர்களின் அதேயளவுக்கு கடுமையான விமர்சனத்துக்கும் ஆளானார்.Politics
ஒருபுறத்தில், மங்கையற்கரசி பல தமிழர்களால் மிகுந்த அன்புடன் நடத்தப்பட்டாலும், மறுபுறம் பல சிங்களவர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட தமிழ் பெண் அரசியல்வாதியாகவும் விளங்கினார். . இத்தகைய முரண்பட்ட கருத்துக்களுக்கு மத்தியிலும், மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அரசியலில் தீவிரமாக இருந்த காலத்தில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்தார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
நான்கு தசாப்தங்களாக நீடித்த புகழ்பெற்ற அரசியல் வாழ்க்கையில், 20 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய இலங்கையின் பிரபல தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவிதான் மங்கையற்கரசி. அமிர்தலிங்கம் இலங்கைத் தமிழரசு கட்சியினதும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினதும் முக்கிய தலைவராக விளங்கியவர். அவர் 1956 முதல் 1970 வரை வட்டுக்கோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் 1977 முதல் 1983 வரை காங்கேசன்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார்..
1977-83 காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம், 13 ஜூலை 1989 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டபோது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அமிர்தலிங்கமும் மனைவி மங்கையற்கரசியும் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் பிரிக்க முடியாத மங்கையற்கரசியின் வாழ்க்கை அவரது கணவரின் அரசியல் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தது. சிவபெருமானையும் பார்வதியையும் போன்று அமிர்தலிங்கம் ‘சிவம்’ என்றால் மங்கையற்கரசி அவரது ‘சக்தி’யாகத் திகழ்ந்தார். அந்த அரசியல் தம்பதியினர் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்ற ஒரு காலம் இருந்தது. இளைஞர்கள் அவர்களை ‘அமிர்தண்ணன்’ என்றும் ‘மங்கை அக்கா’ என்றும் அன்போடு அழைத்தனர்.Politics
அந்தப் பின்னணியில், மங்கையற்கரசியை அமிர்தலிங்கத்தின் மனைவி என்று ஊடகங்கள் கூறுவது சரியானதுதான். அமிர்தலிங்கத்தை அவர் திருமணம் மட்டும் செய்யாமல் இருந்திருந்தால், மங்கையற்கரசி இந்த அளவுக்கு அரசியல் களத்தில் பிரவேசித்திருக்க வாய்ப்பில்லை. என்றாலும், மங்கையற்கரசி அமிர்தலிங்கம் தனக்கென ஒரு தனித்துவமான அரசியல் ஆளுமையைக் கொண்டிருந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மங்கையற்கரசி தனது கணவருடன் அரசியல் பாதையில் விருப்பத்துடன் பயணம் செய்தாலும், கணவரின் புகழில் மட்டும் அவர் குளிர் காயவில்லை. மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்ற ஒரு வசீகரமான ஆளுமை அவருக்கு இருந்தது. மங்கையற்கரசி ஒரு சுதந்திரமான சிந்தனையைக் கொண்டிருந்ததோடு, கடந்துபோன காலகட்டம் ஒன்றில் அரசியலில் பெரும் செல்வாக்கையும் செலுத்தினார்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி
அமிர்தலிங்கத்தினதும் மங்கையற்கரசியினதும் பெயர்கள் சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பரிச்சயமானவை. அமிர்தலிங்கம் சட்டக் கல்லூரியில் எனது தந்தையாரின் சமகாலத்தவர். வீட்டில் தமிழ் அரசியல் பற்றிப் பேசப்படும் போதெல்லாம் அமிர்தலிங்கம் தம்பதியினரைப் பற்றிய கதைகள் நிச்சயம் வரும்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் நான் கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்பில் படித்தபோது தான் அமிர்தலிங்கம் தம்பதியுடனான எனது நேரடித் தொடர்பு தொடங்கியது. நான் அப்போது அங்குள்ள ஹோலண்ட் விடுதியில் தங்கியிருந்தேன். 1970 பொதுத் தேர்தலில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் அ. தியாகராஜாவிடம் தோல்வியடைந்ததால், அமிர்தலிங்கம் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. வட்டுக்கோட்டை சந்தி பஸ் நிலையத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களைக் கண்டால், தனது வாகனத்தில் இடம் இருந்தால் அமிர்தலிங்கம் அவர்களுக்கு எப்போதும் ‘லிஃப்ட்’ கொடுப்பார்.
அவரது மகன்களான காண்டீபனும் பகீரதனும் அப்போது யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களாக இருந்தனர். சில யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள் அரசியல் ரீதியான சந்திப்புகளுக்காக மூளாய் பகுதியில் உள்ள அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி செல்வதுண்டு. அந்த சந்தர்ப்பங்களில் மங்கையற்கரசி சிறப்பாக விருந்தோம்புவார். Politics
எங்களைப் போன்ற விடுதி மாணவர்களை, தாயின் கைமணத்தில் உணவு கிடைக்காத பிள்ளைகளாகக் கருதி மங்கையர்க்கரசி மிகுந்த அன்புடனும் தாராள மனதுடனும் நடத்துவார். காண்டீபனுடனும் பகீரதனுடனுடனும் நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவர்கள் இருவரும் கல்லூரியில் எனக்கு இளையவர்கள்.
பிற்காலத்தில், நான் பத்திரிகைத் துறையில் பிரவேசித்த பின்னர், ஒரு ஊடகவியலாளராக அமிர்தலிங்கத்துடன் பழகத் தொடங்கினேன். ‘வீரகேசரி’, ‘தி ஐலண்ட்’ மற்றும் ‘தி இந்து’ போன்ற பத்திரிகைகளில் நான் பணியாற்றியபோது, அமிர்தலிங்கம் எனக்கு ஒரு முக்கியமான அரசியல் தொடர்பாகவும் தகவல்களை வழங்கும் மூலமாகவும் விளங்கினார்.
நான் அவரை பாராளுமன்றத்திலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுதியான ‘சிராவஸ்தி’க்கு அருகிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலும் அடிக்கடி சந்திப்பேன். நான் யாழ்ப்பாணம் செல்லும் போதெல்லாம் மூளாயில் உள்ள அவரது இல்லத்திற்கும் செல்வேன். ஜூலை 1983-க்குப் பிறகு அவர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தபோது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் அவர்களைச் சந்தித்து நேர்காணல் செய்துள்ளேன். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்காக அவர் கொழும்பு வரும்போது எம்பிரஸ் ஹோட்டல் மற்றும் பழைய தப்ரபேன் ஹோட்டலிலும் (தற்போது கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல்) அவரைச் சந்திப்பேன்.
அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்திலும் இல்லாவிட்டாலும் பெரும்பாலானவற்றில் மங்கையற்கரசி அங்கிருப்பார். நான் 1988-ல் இலங்கையை விட்டு வெளியேறி கனடாவில் இருந்தபோதுதான் 1989 ஆம் ஆண்டில் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார். காண்டீபனும் பகீரதனும் பிரித்தானியாவுக்குச் சென்று அங்கு வசித்ததால் அமிர்தலிங்கத்தின் மறைவுக்குப் பிறகு மங்கையற்கரசியும் லண்டனுக்குச் சென்றுவிட்டார். கனடாவில் வசித்த தனது சகோதரியையும் சகோதரனையும் பார்க்க அவர் அடிக்கடி அங்கு வருவார்.
அப்போது நான் அவரைச் சந்தித்து கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்து நீண்ட நேரம் உரையாடுவேன். அவர் எப்போதும் போலவே நட்புரிமை பாராட்டி என்னுடன் பழகினார். ஆனால் அவரிடம் இருந்த அந்தப் பழைய உற்சாகம் மறைந்திருந்தது. அவரிடம் எப்போதும் ஒரு அடக்க முடியாத சோகம் குடி கொண்டிருந்தது. தனது கணவரின் மரணத்தால் அவர் உணர்ந்த அந்தப் பேரிழப்பை எவராலும் எளிதில் அடையாளம் காண முடியும். பிரித்தானியாவில் அவர் ஈடுபட்டிருந்த பல்வேறு சமூக மற்றும் கலாச்சாரச் செயற்பாடுகள் தொடர்பான புகைப்படங்களை என்னிடம் காண்பிப்பார். புத்தகங்களையும் சட்டைகளையும. எனக்குப் பரிசாக வழங்குவார்.
பகீரதன் கனடா வரும் போதெல்லாம் டொரண்டோவில் அவரைச் சந்திப்பேன். இந்த தனிப்பட்ட உறவு மற்றும் அறிவின் துணையுடன்தான் மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் வாழ்க்கையையும் காலத்தையும் குறித்து எழுத முற்படுகிறேன்.
“மங்கையர்களுக்கு அரசி"
மங்கையற்கரசி என்பதற்கு தமிழில் ‘ மங்கையர்களின் அரசி’ என்று பொருள். அவர் ஜூலை 3, 1933 அன்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் மேற்கு. உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள மூளாய் கிராமத்தில் பிறந்தார். இவரது தாய் நாகம்மா மூளாயைச் சேர்ந்தவர், தந்தையார் வல்லிபுரம் இன்னொரு கிராமமான குரும்பசிட்டியைச் சேர்ந்தவர். திருமணத்திற்குப் பிறகு அவர் மூளாய்க்கு வந்தார்.
வல்லிபுரம் பண்டாரவளையில் நான்கு வணிக நிறுவனங்களை வைத்திருந்த ஒரு வெற்றிகரமான வர்த்தகர். அவரது பிரதான நிறுவனமான ‘வல்லிபுரம் ஸ்டோர்ஸ்’ 1983 கறுப்பு ஜூலை வன்முறையின் போது எரிக்கப்பட்டது. வல்லிபுரம் - நாகம்மா தம்பதியினருக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் இருந்தனர், அவர்களில் மங்கையற்கரசி மூத்தவர். வீட்டில் அவரது
செல்லப் பெயர் ‘தவம்’. பெற்றோருக்குப் பத்து ஆண்டுகளாகக் குழந்தைகள் இல்லாததால், குழந்தைப் பேற்றுக்காக அவர்கள் செய்த பல தவங்களின் பலனாக அவர் பிறந்ததால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது. 'தவம்' என்ற அந்தப் பெயர் நிலைத்துவிட்டது, கணவர் அமிர்தலிங்கம் உட்பட பெரும்பாலான குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் உரையாடும்போது அவரைத் தவம் என்றே அழைப்பார்கள்.
வல்லிபுரத்தின் பிள்ளைகள் மூளாய் பகுதியில் வளர்ந்தனர், பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே பண்டாரவளைக்குச் செல்வார்கள். மங்கையற்கரசி மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும் பின்னர் அருகிலுள்ள சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் கல்வி பயின்றார். இசை ஆர்வமும் திறமையும் கொண்ட பாடகியான அவர், பின்னர் முன்னாள் சட்டசபை உறுப்பினர் சேர் பொன்னம்பலம் இராமநாதனால் நிறுவப்பட்ட மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் சேர்ந்தார்.
அங்கு மங்கையற்கரசி நுண்கலைத் துறையில் பயின்றார். கர்நாடக சங்கீதத்தில் அவர் சிறந்து விளங்கினார். இராமநாதன் கல்லூரியில் கற்பித்த இந்திய விரிவுரையாளரான சாம்பமூர்த்தி, அவரைத் தமிழ்நாட்டிற்குச் சென்று மேலதிக இசை பயிலுமாறு ஊக்கப்படுத்தினார். ஆனால், மங்கையற்கரசியின் தந்தை வல்லிபுரம் அந்த யோசனையை நிராகரித்துவிட்டு தனது அன்பு மகளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடத் தொடங்கினார்.
மூளாய்க்கு அருகிலுள்ள பண்ணாகம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் வழக்கறிஞர் தமிழ் அரசியலில் தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கிய நேரம் அது. பிரிட்டிஷ் ரயில்வேயில் மலேசியாவில் ரயில் நிலைய அதிபராகப் பணியாற்றிய அப்பாபிள்ளையின் மகன் தான் அமிர்தலிங்கம். ஆகஸ்ட் 26, 1927 அன்று பிறந்த அமிர்தலிங்கம் ஒரு சிறந்த மாணவர். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் சென்ற முதல் மாணவர் அவரே.
தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு அமிர்தலிங்கம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து ஒரு வழக்கறிஞராக வெளியே வந்தார். பல்கலைக்கழக நாட்களில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களுக்குச் சொந்தமான ‘சுதந்திரன்’ பத்திரிகையில் கூட்டாட்சி (சமஷ்டி ) குறித்து கட்டுரைகள் எழுதியதன் மூலம் அமிர்தலிங்கம் தந்தை செல்வாவின் கவனத்தைப் பெற்றார். .
அந்தக் காலத்தில் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. 1949 டிசம்பரில் தந்தை செல்வா தலைமையில் பிரிந்து சென்ற ஒரு குழு ‘இலங்கைத் தமிழரசு கட்சி’யைத் தொடங்கியது.
தந்தை செல்வா அமிர்தலிங்கத்திற்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி புதிய கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். அமிர்தலிங்கம் அதில் இணைந்து தமிழரசு கட்சியின் தாபக உறுப்பினர்களில் ஒருவரானார். அவர் வட்டுக்கோட்டை தொகுதியில் 1952 பொதுத்தேர்தலில் தமிழரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
அழகிய அமிர்தலிங்கம்
சிறந்த பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்ட அழகான இளைஞரான அமிர்தலிங்கம் தமிழ் அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்தார். ஒருமுறை அவர் இராமநாதன் கல்லூரியில் ஒரு நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அதே நிகழ்வில் மங்கையற்கரசி பாடிய பாடல் அந்த வழக்கறிஞர் -- அரசியல்வாதி மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, மனதில் காதல் அரும்பியது. நண்பர்கள் மூலம் மங்கையற்கரசியின் குடும்பத்திற்குத் திருமண விருப்பத்தைத் தெரிவித்தார். அமிர்தலிங்கம் மங்கையற்கரசியின் பாடலைக் கேட்டதாகவும், பாடலையும் பாடியவரையும் அவருக்குப் பிடித்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அமிரை முதல் பார்வையிலேயே தானும் காதலித்ததாக மங்கை எஅக்கா பின்னர் வெட்கத்துடன் ஒப்புக் கொண்டார். மங்கையற்கரசியின் தந்தை வல்லிபுரம் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் தீவிர ஆதரவாளர். தனது மகளை ஒரு அரசியல்வாதிக்கு அதுவும் ஒரு ‘ தமிழரசு கட்சிக்காரருக்கு ’ - திருமணம் செய்து கொடுக்க அவர் மறுத்து விட்டார். இறுதியில், வெலிமடையில் தொழிலதிபராக இருந்த மங்கையற்கரசியின் மாமா நாகலிங்கம் தலையிட்டு அமிர்தலிங்கத்தை மருமகனாக ஏற்றுக் கொள்ள வல்லிபுரத்தைச் சம்மதிக்க வைத்தார்.
தந்தை செல்வாவினதும் தமிழரசுக் கட்சியினதும் ஆதரவாளரான நாகலிங்கம், மதுப் பழக்கம் இல்லாத அமிர்தலிங்கம் ஒரு நல்ல மனிதர் என்றும் மருமகனாக அமையப் பொருத்தமானவர் என்றும் தனது மைத்துனரைச் சம்மதிக்க வைத்தார். அமிர்தலிங்கத்தைச் சந்தித்த பிறகு வல்லிபுரமும் ஒப்புக் கொண்டார். அமிரின் குணாதிசயமும் அவரது தோற்றமும் அவரை ஈர்த்தது. பின்னர் மங்கையற்கரசியின் தங்கை ஞானாம்பிகை, அமிர்தலிங்கத்தின் தம்பி திகம்பரலிங்கத்தைத் திருமணம் செய்து கொண்டார். யாழ்ப்பாணக் கல்லூரியில் இருவரும் மாணவர்களாக இருந்த போது அவர்களுக்குள் காதல் அரும்பியது. திகம்பரலிங்கம் குடும்பத்தினர் பின்னர் கனடாவிற்கு புலம் பெயர்ந்தனர்.
மங்கையற்கரசி -- அமிர்தலிங்கம் திருமணம் 1954 ஜூலையில் மூளாயில் யில் நடைபெற்றது. மணமகன் அன்று மாலையே வடமராட்சிப் பகுதியில் உள்ள கரவெட்டிக்குச் சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் வி. பொன்னம்பலத்துடன் அரசியல் விவாதத்தில் ஈடுபட்டார். வி. பொன்னம்பலம் அன்றைய தினம் அமிர்தலிங்கத்தைப் ‘புது மாப்பிள்ளை’ என்று கிண்டல் செய்து நகைச்சுவைகளை அள்ளி வீசினார் வி.பி. Politics
தனது கணவரின் முதல் காதல் தான் அல்ல, இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைவிதிதான் என்பது அந்தப் மணப் பெண்ணுக்கு விரைவாகவே புரிந்துவிட்டது. இந்த உண்மையை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, அவரும் அமிர்தலிங்கத்தின் அரசியலுக்காகத் தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அமிரும் தனது அரசியல் கூட்டங்களுக்கும் விவாதங்களுக்கும் தனது புதிய மனைவியை அழைத்துச் செல்லவே விரும்பினார்.
பெண்கள் அரசியலில் ஈடுபடுவதோ அல்லது கணவருடன் அரசியல் கூட்டங்களுக்குச் செல்வதோ வழக்கில் இல்லாத பழமைவாத யாழ்ப்பாணத்தில் இது ஒரு புதிய போக்காக இருந்தது. அதற்காக அமிர்தலிங்கம் தம்பதியினர் அரசியல் எதிரிகள் உட்பட பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகினர் என்றபோதிலும், அமிர்தலிங்கத்தின் உயிர் பறிக்கப்படும் வரை அவர்கள் அந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் இணையராகவே இயங்கிவந்தனர்.
பனாகொடை இராணுவ முகாம்
1983 ஆம் ஆண்டு அமிர்தலிங்கமும் மங்கையர்க்கரசியும் பிரான்ஸிற்கு விஜயம் செய்தபோது பாரிஸில் நடந்த ஒரு சம்பவத்தை பலரும் நினைவு மீட்டுவர். பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் 'லா சாப்பல்' பகுதியில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில், இளைஞர் ஒருவர் அமிர்தலிங்கத்திடம் தமிழில் ஒரு கேள்வி கேட்டார் ; "நீங்கள் ஏன் எல்லா இடங்களுக்கும் உங்கள் மனைவியுடன் செல்கிறீர்கள்? அவர் ஏன் உங்களுடன் பாரிஸிற்கு வந்திருக்கிறார்?"
சற்றும் பதற்றமடையாத அமிர்தலிங்கம் புன்னகையுடன் பதிலளித்தார் ; "எனது சொந்த மனைவியுடன் செல்வதில் என்ன தவறு? எனது மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணுடன் நான் சென்றால்தான் அது தவறு. அது மாத்திரமல்லாமல், எனது மனைவி என்னுடன் பாரிஸ் போன்ற இடங்களுக்கு மட்டுமல்ல, நாங்கள் இருவரும் ஒன்றாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பனாகொடை இராணுவ முகாமிற்கும் வந்திருக்கிறார்."
அமிர்தலிங்கத்தின் அந்த பதில் அங்கிருந்தோரை உற்சாகத்தில் ஆழ்த்தியது, கேள்வி கேட்டவர் வாயடைத்துப் போனார். 1961-ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயக்க அரசாங்கத்தால் தமிழரசுக் கட்சியின் 74 சத்தியாக்கிரகிகள் பனாகொடை இராணுவ முகாமில் ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததையே அமிர்தலிங்கம் பாரிஸில் குறிப்பிட்டார்.
அப்போது கைதிகளாக இருந்தவர்களில் மங்கையர்க்கரசி மட்டுமே ஒரே ஒரு பெண்மணி. பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2002 ஆம் ஆண்டில் மங்கையர்க்கரசி மீண்டும் பாரிஸின் அதே லா சாப்பல் பகுதியில் உரையாற்றினார். ஆனால் இந்த முறை அவர் தனது கணவர் இல்லாமல் தனியாக இருந்தார் (அமிர்தலிங்கம் 1989 ஜூலையில் கொல்லப்பட்டார்). அமிர்தலிங்கத்தின் 75 வது பிறந்தநாள் (வள விழா) நிகழ்வே அது.
திருமதி அமிர்தலிங்கம் தனது கணவர் கொல்லப்பட்ட சூழ்நிலையைக் கண்ணீருடன் விவரித்தார். உணர்ச்சி வசப்பட்ட குரலில் அவர் தைரியமாகத் தமிழில் கேள்வி எழுப்பினார்: "நான் 'தம்பி' பிரபாகரனிடமும் விடுதலைப் புலிகளிடமும் கேட்கிறேன் - ஏன் என் கணவரைக் கொன்றீர்கள்? நீங்கள் அவரை இப்படிக் கொல்லும் அளவுக்கு அவர் தமிழ் மக்களுக்குச் செய்த தீங்குதான் என்ன?" இதற்குப் பதில் ஏதும் வரவில்லை, ஆனால், புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிலர் அவர் கணவரின் இறப்பிற்கு மௌனமாக இருக்காமல் "ஒப்பாரி" வைப்பதாகக் கூறி அவரைக் குறைகூறினர்.
மங்கையர்க்கரசியின் அரசியல் வாழ்க்கை 1954 ஆம் ஆண்டில் அமிர்தலிங்கத்துடனான திருமணத்துடன் தொடங்கியது. அவரது ஆரம்பகால அரசியல் அனுபவங்களில் ஒன்று அதே ஆண்டு அன்றைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது நிகழ்ந்தது.Politics
பிரதமரின் வருகையை எதிர்த்து தமிழரசுக் கட்சி கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்தியது. கறுப்புக் கொடி ஏந்திய தொண்டர்களில் மங்கையர்க்கரசி மட்டுமே பெண். பெண்ணழகை இரசிப்பதில் பெயர் பெற்ற சேர் ஜோன், இந்த காட்சியைக் கண்டு வியப்படைந்தார். அவர் தனது கோட்டின் பொத்தானில் இருந்த ரோஜாவை எடுத்து குறும்புத்தனமாக மங்கையர்க்கரசி மீது வீசினார். மங்கையர்க்கரசி உடனடியாக அதைத் திருப்பி அவர் மீதே எறிந்தார். ஆனால் அதற்குப் பிறகு நடந்தவை அத்தனை வேடிக்கையானதாக இல்லை!
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தினர். அமிர்தலிங்கம் உட்பட பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.. அவரது நெற்றியில் இருந்து இரத்தம் வழிந்தது. இதில் கடுமையாக காயமடைந்தவர்களில் ஒருவரான பிரபல வழக்கறிஞர் வீ. ஏ. கந்தையாவின் கண்ணாடியும் உடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1956 பொதுத்தேர்தலில் கந்தையா ஊர்காவற்றுறை தொகுதியிலும் அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டை தொகுதியிலும் வெற்றி பெற்று பாராளுமன்றப் பிரவேசம் செய்தனர்.
சத்தியாக்கிரகப் போராட்டம்
அரசியல் காரணங்களுக்காக அமிர்தலிங்கம் தாக்கப்பட்டு இரத்தம் சிந்துவதை மங்கையர்க்கரசி முதன் முதலில் கண்ட நிகழ்வு இதுதான். ஆனால், இத்தகைய தாக்குதல்களுக்கு மிக மோசமான உதாரணம் 1961 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது நிகழ்ந்தது. சத்தியாக்கிரகிகள் யாழ்ப்பாணக் கச்சேரியையும் அரசாங்க அதிபர் மயில்வாகனம் ஸ்ரீகாந்தாவின் உத்தியோகபூர்வ இல்லத்தையும் முற்றுகையிட்டனர். சிவில் நிர்வாகம் முடங்கியது. ஒரு குறிப்பிட்ட நாளில், அமிர்தலிங்கம் மற்றும் டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன் உட்பட ஐந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபரின் ஜீப் வண்டியை வெளியேற விடாமல் அதன் முன்னால் தரையில் படுத்து மறித்தனர். பொலிசார் தரையில் படுத்திருந்த சத்தியாக்கிரகிகளை குண்டாந்தடிகளால் கொடூரமாகத் தாக்கினர்.
இந்தக் கொடூரமான காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்து மங்கையர்க்கரசியும் அழகம்மா என்ற மற்றொரு பெண் தொண்டரும் கண்ணீருடன் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் சென்று நின்றனர். அதன் பின்னரே அரசாங்க அதிபரின் வாகனம் பின்வாங்கியது. பொலிசார் விலகிச் சென்றனர்.
சீருடை அணிந்தவர்களின் கைகளால் தனது கணவர் தாக்கப்படுவதையும் காயமடைவதையும் பலமுறை நேரில் கண்ட போதிலும், மங்கையர்க்கரசி அதனால் தனது கணவரின் அரசியல் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதற்கு அனுமதிக்கவில்லை.Politics
இரத்தம் வடிந்த தனது கணவரைக் கண்டு அவர் வருத்தமடைந்தாலும், அரசியல் ரீதியாக அவர் பின்வாங்கவில்லை. மாறாக, தமிழ் இலட்சியத்துக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தனது கணவர் செய்த தியாகங்களைக் கண்டு அவர் பெருமிதம் கொண்டார். தமிழ் மக்கள் அமிர்தலிங்கத்தின் அரசியலை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை மங்கையர்க்கரசி அறிந்திருந்தார். அந்த உணர்வே அவருக்கு இத்தகைய இரத்தக் களரியான காட்சிகளைத் தாங்கும் வலிமையைத் தந்தது.
பிற்காலத்தில் அவரை ஆன்மீக ரீதியாகவும் உணர்ச்சி உணர்வுபூர்வமாகவும் உலுக்கியது அவரது கணவர் சடலமாக இரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சிதான். 1989 ஜூலை 13 அன்று கொழும்பில் அமிர்தலிங்கம் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த துரதிர்ஷ்டவசமான ஜூலை 13 அன்று தான் கண்ட காட்சியை நினைக்கும் போதெல்லாம், கவிஞர் காசி ஆனந்தனின் "ஒரு செங்களம் ஆடி" என்ற வரிகள் தான் நினைவுக்கு வருவதாக அவர் பின்னாட்களில் கூறுவார்.
மட்டக்களப்பு அமிர்தகழியைச் சேர்ந்த காசி ஆனந்தன் (முழுப் பெயர் காத்தமுத்து சிவானந்தன்) தற்போது சென்னையில் வசிக்கிறார். இவர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைத் தூண்டிய அவரது உணர்ச்சிமிக்க கவிதைகளுக்காக அவர் புகழ்பெற்றவர்.
காசி ஆனந்தனின் இரண்டு மகள்களும் மருத்துவர்கள் - மருத்துவர்களையே திருமணம் செய்து கொண்டு வெளிநாடுகளில் வசதியாக வாழ்கிறார்கள். ஆனால் காசி ஆனந்தன், இலங்கைத் தமிழர்கள் தமிழீழத்திற்காகத் தொடர்ந்து போராடி 'கூட்டுத் தற்கொலை' செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பும் தமிழ்நாட்டின் தீவிரவாத அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துச் செயற்படுகிறார். தனது பிள்ளைகள் செழிப்பாக வாழ்வதை உறுதி செய்துகொண்டு, காசி ஆனந்தன் இப்போது தமிழ் இளைஞர்களை நான்காம் ஈழப் போருக்குத் தயாராகுமாறு தூண்டுகிறார்.
எவ்வாறிருந்தாலும், காசி ஆனந்தனின் கவிதைகளும் பாடல்களும் இலங்கைத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு காலம் இருந்தது. அவை அரசியல் கூட்டங்களில் இசைக்கப்பட்டன. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காசி ஆனந்தனின் பாடல்களைப் பாடுவதில் மிகவும் பிரபலமானவர். காசி ஆனந்தனின் வரிகளின் உணர்ச்சிபூர்வமான உள்ளடக்கத்திற்கு மங்கையர்க்கரசியின் குரல் ஒரு பெரும் ஈர்ப்பைத் தந்தது. இது பல தமிழ் இளைஞர்களின் இதயங்களைத் தொட்டது.Politics
எனது இளமைக் காலத்தில் நானும் இதனால் கவரப்பட்டேன். மங்கையர்க்கரசி காசி ஆனந்தனின் பாடல்களைப் பாடுவதை "சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போல" என்று நான் தமிழில் எழுதியது எனக்கு நினைவில் இருக்கிறது.
பேச்சுகளும் பாடல்களும்
ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, மங்கையர்க்கரசியின் அரசியல் பயணம் திருமணத்திற்குப் பிறகு தனது கணவருடன் அரசியல் கூட்டங்களுக்குச் செல்லத் தொடங்கியபோது ஆரம்பித்தது. அமிர்தலிங்கம் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.. அவர் வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களுக்கும் சென்று கட்சி கிளைகளைத் திறக்கவும் கூட்டங்களில் உரையாற்றவும் வேண்டியிருந்தது. ஆரம்பக் கட்டங்களில் மங்கையர்க்கரசி ஒரு அமைதியான பங்கேற்பாளராக இருந்தார். பின்னர், கூட்டங்களின் தொடக்கத்திலும் முடிவிலும் "தமிழ்த் தாய் வாழ்த்து" பாடுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். பிறகு, கூட்டங்களில் பேசுமாறும் அவர் கேட்கப்பட்டார். கணவரின் ஊக்கத்தால், மங்கையர்க்கரசி மெல்ல மெல்லப் பேசத் தொடங்கி, பின்னர் ஒரு சக்திவாய்ந்த -- மக்களை ஈர்க்கக்கூடிய பேச்சாளராக மலர்ந்தார்.
மங்கையர்க்கரசியின் பேச்சுகளுக்கும் பாடல்களுக்கும் பெரும் தேவை இருந்தது. முன்னாள் "டெய்லி மிரர்" ஆசிரியர் ரெஜி மைக்கேல் ஒருமுறை அமிர்தலிங்கத்தைப் பற்றி வேடிக்கையாக, "மக்கள் கூட்டத்தை நெகிழவைக்கவும் மக்கள் கூட்டத்தால் நெகிழ்ந்துவிடவும் கூடிய மனிதர்" என்று எழுதினார். இது அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசிக்கும் ஓரளவு பொருந்தும். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவராக இருந்ததால், அவர் சில சமயங்களில் ஆவேசமான உரைகளை நிகழ்த்தும் போக்கைக் கொண்டிருந்தார்.
இவரது சில கூற்றுகளும் வெளிப்பாடுகளும் சில சுயநலவாதிகளால் திரித்துக் கூறப்பட்டு, அவர் தீவிர சிங்கள விரோதமும் இனவாதப் போக்கு கொண்டவர் என்பது போலக் காண்பிக்கப்பட்டது. இத்தகைய விமர்சனங்கள் பெரும்பாலும் ஆதாரமற்றவையும் அநீதியானவையுமாகும். இருப்பினும், " உணர்தலே உண்மை" என்று கருதப்படும் அரசியல் உலகில், மங்கையர்க்கரசி பெரிதும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டார். சில ஊடகவியலாளர்கள் அவரை "சிங்களவர்கள் அதிகம் வெறுக்க விரும்பும் தமிழ்ப் பெண் அரசியல்வாதி" என்றும் கூட வர்ணித்தனர்.Politics
"மங்கை அக்கா" என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், 27 ஆண்டுகளாக வசித்து வந்த பிரிட்டனில் 2016 மார்ச் 9 அன்று தனது 82வது வயதில் காலமானார். மார்ச் 8 அன்று உடல் நலக் குறைவு காரணமாக சர்ரேயில் தேம்ஸ் ஓரமாக உள்ள 'ராயல் பரோ ஆஃப் கிங்ஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 30 மணிநேரத்திற்குப் பிறகு மார்ச் 9 அன்று அவர் காலமானார். அவரது இளைய மகன் டாக்டர் பகீரதன் அமிர்தலிங்கத்தின் கூற்றுப்படி, அவர் 'கடுமையான கணைய அழற்சி' (Acute pancreatitis) காரணமாகப் பல உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு 2016 மார்ச் 20 அன்று லண்டனில் நடைபெற்றது.
( இந்த கட்டுரை திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் பத்தாவது நினைவு தினத்தை முன்னிட்டு எழுதப்பட்டது)
டி பி.எஸ். ஜெயராஜ்


