கனடாவில் மான் ஒன்றினால் பறிபோன உயிர்
கனடா
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் கிராண்ட் பே-வெஸ்ட்ஃபீல்ட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 7-ல் (Highway 7), கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில் 31 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றின் குறுக்கே திடீரென மான் ஒன்று வந்துள்ளது.
அதன் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக வாகனத்தை ஓட்டுநர் பக்கவாட்டில் திருப்பியபோது, அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் வடக்கு நோக்கிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மானைத் தவிர்க்க முயன்ற மற்றுமொரு வாகனத்தின் ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக உயிரிழந்தவரின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யவும், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






















