டைடானிக் கப்பலின் வரலாற்று சாட்சி பெருந்தொகைக்கு ஏலம்
சுமார் 114 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய 'டைடானிக்' கப்பல் குறித்த சுவாரஸ்யங்கள் இன்றும் குறையவில்லை.
அந்தப் பெருங்கப்பல் விபத்துக்குள்ளான போது, ஒரு பயணியின் உயிரைக் காப்பாற்றிய 'உயிர் காப்பு அங்கி' (Life Jacket) ஒன்று, லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் சுமார் 9,06,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
இந்த உயிர் காப்பு அங்கியை அணிந்து உயிர் பிழைத்தவர், டைடானிக் கப்பலின் முதல் வகுப்புப் பயணியான லாரா மேபெல் ஃபிரான்காடெல்லி ஆவார்.
இந்த அங்கியில் லாரா மற்றும் அவருடன் அதே மீட்புப் படகில் தப்பிய பிற உயிர் பிழைத்தவர்களின் கையெழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
மேற்கு இங்கிலாந்தின் தேவிசஸில் உள்ள 'ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் & சன்' ஏல நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், ஆரம்பத்தில் 2.5 லட்சம் பவுண்டுகள் முதல் 3.5 லட்சம் பவுண்டுகள் வரை மட்டுமே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உலகெங்கிலும் இருந்த கடும் போட்டி காரணமாக, தொலைபேசி வாயிலாகப் பங்கேற்ற ஒரு மர்ம நபர் இதனை மிக அதிக விலைக்கு வாங்கியுள்ளார்.
உயிர் காப்பு அங்கி மட்டுமன்றி, டைடானிக் மீட்புப் படகில் இருந்த இருக்கை மெத்தை (Seat Cushion) ஒன்றும் 5,27,000 டாலர்களுக்கு ஏலம் போனது.
இதனை அமெரிக்காவின் டென்னசி மற்றும் மிசூரியில் உள்ள டைடானிக் அருங்காட்சியக உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
"இந்தச் சாதன விலைகள் டைடானிக் கதையின் மீதான மக்களின் தீராத ஆர்வத்தையும், அந்த விபத்தில் சிக்கியவர்களின் கதைகளுக்குக் கிடைக்கும் மரியாதையையும் காட்டுகின்றன." என ஏலதாரர் ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.






















