• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒபெக் மற்றும் ஒபெக்+ அமைப்பிலிருந்து விடைபெற்றது ஐக்கிய அரபு இராச்சியம்

உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு இராச்சியம் (UAE), சுமார் 6 தசாப்தங்களாக அங்கம் வகித்து வந்த ஒபெக் மற்றும் ஒபெக் பிளஸ் அமைப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் நீண்டகால மூலோபாய மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒபெக் அமைப்பின் கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாகச் செயற்படுவது, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் முடிவுகளை எடுக்கத் தமக்கு உதவும் என அமீரகம் கருதுகின்றது.

ஐக்கிய அரபு இராச்சியம் 1967 ஆம் ஆண்டு இந்த அமைப்பில் இணைந்தது. தற்போது அது வெளியேறுவதால் ஒபெக் அமைப்பின் மொத்த உற்பத்தித் திறனில் சுமார் 15 சதவீதத்தை அந்த அமைப்பு இழக்கின்றது.

"இது ஒபெக் அமைப்பின் முடிவின் ஆரம்பம்" என எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனமான MST பினான்சியல் நிறுவனத்தின் தலைவர் சவுல் கவோனிக் (Saul Kavonic) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தை தொடர்ந்து ஏனைய உறுப்பு நாடுகளும் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஒபெக் அமைப்பின் தரவுகளின்படி, ஐக்கிய அரபு இராச்சியம் ஆண்டுக்கு 2.9 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்கிறது. அத்தோடு, சவூதி அரேபியா ஒன்பது மில்லியன் பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்து அமைப்பின் தலைமையாகச் செயற்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, எண்ணெய் சந்தையை நிர்வகிக்கும் பாரிய சுமை இனி சவூதி அரேபியா மீது மட்டுமே விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் இது ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

1960 ஆம் ஆண்டு ஈரான், ஈராக், குவைத், சவூதி அரேபியா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 11 நாடுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்தத் தீர்மானம் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
 

Leave a Reply