அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும் – பரீட்சைகள் திணைக்களம்
இலங்கை
2026 ஆம் ஆண்டுக்கான தேசியப் பரீட்சைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படியே நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் கல்விக்கான பாடசாலை நாட்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்ட பின்னரே, 2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சை கால அட்டவணை 2025 செப்டம்பர் 14 ஆம் திகதி வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டார்.
அட்டவணைப்படி, 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும்.
இப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 வரை கோரப்பட்ட நிலையில், அனுமதி அட்டைகள் ஜூலை மாதத்தில் வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
5 ஆம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 30 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சை ஒக்டோபர் 24-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தப் பரீட்சைக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 22-ஆம் திகதி தொடங்கி, ஜூலை 16 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை மாத முற்பகுதியில் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்தந்தப் பரீட்சைகள் நிறைவடைந்த உடனேயே மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே, புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜூன் 19 அன்று 2025 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர (Ordinary Level) பரீட்சை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பரீட்சை முடிவுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 25 முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.
2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடியே நடைபெற்று வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.






















