• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாதுகாப்பு படை தலைமையகத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல்.. 4 பேர் பலி - கராச்சியில் பரபரப்பு 

பாகிஸ்தானின் கராச்சி நகரில் குலிஸ்தான் இ ஜவ்ஹர் என்ற பகுதியில் அமைந்துள்ள சிந்து ரேஞ்சர்ஸ் பாதுகாப்புப் படைத் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 4 பேர் உடல் சிதறிப் பலியாகியுள்ளனர்.

நேற்று பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் முதன்மை நுழைவாயில் அருகே வந்த பயங்கரவாதி ஒருவன், தனது உடலில் கட்டியிருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்துள்ளான்.

இந்த முதல் குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததுடன், அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு சிறிய குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்துள்ளன.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, அங்கிருந்த மற்ற பயங்கரவாதிகள் படையினரை நோக்கிக் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜமாத் உல் அஹ்ரார் பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதல் நடந்த குலிஸ்தான் இ ஜவ்ஹர் சாலையானது கராச்சியின் முக்கியப் பல்கலைக்கழகங்களையும், பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையத்தையும் இணைக்கும் முதன்மைச் சாலையாகும்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி சாலையை முற்றிலுமாக முடக்கியுள்ளனர்.
 

Leave a Reply