• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

சினிமா

இயக்குநர் இளன் நடிப்பில் உருவாகி இருக்கும் "பியார் பிரேமா கல்யாணம்" திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தான் இந்தப் படத்தை பார்த்துவிட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தொடங்கிய ஒரு விஷயம் இப்போதும் தொடர்கிறது. பொதுவாக ஒரு படத்தின் ஆரம்பத்தில் இரண்டு அல்லது மூன்று பாடல்களைத்தான் அறிவிப்பார்கள். ஆனால் படம் முடியும் நேரத்தில் 13, 14 டிராக்குகள் இருக்கும். ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் முதலிலேயே முழு டிராக் லிஸ்ட்டையும் அறிவித்தோம். அதே மாதிரியான விஷயத்தை இந்தப் படத்திலும் செய்திருக்கிறோம்.

இது இப்போது இளனுடன் இணைந்த ஒரு ட்ரெண்ட் மாதிரி ஆகிவிட்டது. பாடல்கள் தொடர்ந்து வெளியாகி, சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் இருந்து வரும் அனைத்து ரியாக்ஷன்களும் பாசிட்டிவாக இருக்கின்றன. நான் கமெண்ட்ஸ் உள்ளிட்டவற்றை படித்துக்கொண்டிருக்கிறேன். ரசிகர்கள் காட்டும் அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேலும், இந்தப் படத்தை நான் முழுமையாகப் பார்த்துவிட்டேன். படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு நல்ல என்டர்டெயினராக இருக்கிறது. குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இது இருக்கும். இந்தப் படம் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் தொடர்ந்து இடம்பெறும் படமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன். படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது,” என்று கூறினார்.

இளன் இயக்குநராக மட்டுமின்றி இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவருடன் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் திருமண வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
 

Leave a Reply