• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துபாயில் மூளைச்சாவு அடைந்த 29 வயது இந்திய பெண்ணின் உறுப்பு தானத்தால் 3 பேருக்குக் கிடைத்த மறுவாழ்வு

பிறருக்கு உதவுவதையே தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு வாழ்ந்த ஜோவிட்டா டிசோசா என்ற இளம்பெண், தனது மரணத்திற்குப் பின்னும் மூன்று பேரின் உயிரைக் காத்துத் தனது மனிதநேயத்தை நிலைநிறுத்தியுள்ளார்.

துபாயில் உள்ள புகழ்பெற்ற 'அல் ஜலிலா அறக்கட்டளையின்' முக்கியப் பணியாளராக ஜோவிட்டா பணியாற்றி வந்தார்.

பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனிதநேயப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்த இவருக்கு, அண்மையில் கடுமையான மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டது. தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், மருத்துவர்கள் அவர் 'மூளைச்சாவு' அடைந்ததாக அறிவித்தனர்.

தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கு உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த ஜோவிட்டாவின் எண்ணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், அவரது குடும்பத்தினர் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய உறுப்புதானத் திட்டமான 'ஹயாத்' மூலம் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர்.

இவர்களின் இந்த உன்னத முடிவால், மரணப் படுக்கையில் இருந்த மூன்று நபர்களுக்குப் புதிய உயிர் கிடைத்துள்ளது.

உலக உறுப்புதான தினத்தை முன்னிட்டு ஜோவிட்டாவின் இந்தச் தியாகத்தைப் பாராட்டி அல் ஜலிலா அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆமிர் அல் ஜாரூனி கூறுகையில், "ஜோவிட்டாவின் வாழ்க்கை, கொடுப்பதன் உன்னதத்தை உணர்த்துகிறது. அவரது குடும்பத்தின் இந்த முடிவு மூன்று உயிர்களைக் காப்பாற்றியுள்ளது" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ஜோவிட்டாவின் குடும்பத்தினர் பேசுகையில், "அவளது அன்பான மற்றும் உதவும் குணம்தான் இந்தத் துயரமான நேரத்தில் எங்களுக்குப் பெரிய தைரியத்தைக் கொடுத்தது.

அவள் எப்போதும் மற்றவர்களின் மகிழ்ச்சியையே முதலில் நினைப்பாள், அவளது புன்னகை எங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய மகிழ்ச்சி" என உருக்கமாகத் தெரிவித்தனர்.
 

Leave a Reply