• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மனித மூளையின் மர்மத்தை அவிழ்க்கும் ஆப்டோஜெனெடிக்ஸ்!.. மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுவோர் சாதித்தது என்ன?

இயற்பியல், வேதியியல், மருத்துவம் உள்பட 6 முக்கிய துறைகளுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று தொடங்கி தினமும் ஒரு துறைக்கு வரும் 12ம் தேதி வரை பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன.

அந்தவகையில், நேற்று முதற்கட்டமாக ஸ்வீடனின் கரோலின்ஸ்கா கல்வி நிறுவனத்தில் உள்ள நோபல் சபையால் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. கார்ல் டீசெரோத், பீட்டர் ஹெகெமன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த கார்ல் டீசெரோத் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். ஜெர்மனியை சேர்ந்தவர்களான பீட்டர் ஹெகெமன் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திலும் ஜார்ஜ் நாகல், வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றுகின்றனர்.

ஒளிக்கதிர்களை கொண்டு நரம்பு மண்டலச் செல்கள், செயல்பாடுகளை மிகத் துல்லியமாகக் கட்டுப்படுத்தும் கண்டுபிடிப்புக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்டோஜெனெடிக்ஸ் குறித்த அவர்களின் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளுக்காக அவர்கள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

என்னதான் அறிவியலில் பல முன்னேற்றங்களை மனித குலம் கண்டிருந்தாலும் மனித மூளை என்பது நமக்கு இன்னும் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகவே உள்ளது.

அப்படியான நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது, நினைவுகள், உணர்ச்சிகள் மற்றும் நடத்தைகளை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழி தான் ஆப்டோஜெனெடிக்ஸ்.
ஆராய்ச்சி

20 ஆம் நூற்றாண்டில், மூளையின் எந்தப் பகுதிகள் எந்தச் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கினர்.

ஆனால் அக்கால முறைகளைக் கொண்டு, சரியான காரணங்களைக் கண்டறிய முடியவில்லை.

இருப்பினும், ஆப்டோஜெனெடிக்ஸின் வருகையால், இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

பீட்டர் ஹெகெமனின் ஆர்வத்தால் விளைந்ததே ஆப்டோஜெனெடிக்ஸ்.

'கிளமிடோமோனாஸ்' எனப்படும் ஒரு செல் பாசி (Algae), ஒளியின் திசையில் எப்படி நீந்துகிறது என்று யோசித்த அவர் சக ஊழியரான ஜார்ஜ் நாகலுடன் அதை ஆராய்ந்தார்.

2000களின் முற்பகுதியில், அந்த கிளமிடோமோனாஸ் பாசி செல்லின் மேற்பரப்பில் 'சேனல்ரோடாப்சின்' எனப்படும் ஒரு சிறப்புப் புரதத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அதன் மீது நீல ஒளி படும்போது, ​​அந்தப் புரதத்தில் ஒரு கால்வாய் திறக்கிறது என்றும், அது அயனிகளை செல்லுக்குள் பாய அனுமதித்து, ஒரு மின் சமிக்ஞையை உருவாக்குகிறது என்றும் அவர்கள் கண்டறிந்தனர்.

இந்தப் புரதம் செலுத்தப்பட்ட எந்தவொரு செல்லும் ஒளிக்கு ஏற்ப செயல்படும் என்பதை அவர்கள் நிரூபித்தனர்.

இந்த ஆராய்ச்சியை கார்ல் டீசெரோத் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். அவர் எலிகளின் மூளையில் உள்ள நரம்பு செல்களுக்குள் சேனல்ரோடாப்சின் மரபணுவைச் செலுத்தினார்.

பின்னர் அவர் அவற்றின் மீது நீல ஒளியைப் பாய்ச்சி, நரம்பு சமிக்ஞைகளை வெற்றிகரமாகத் தூண்டினார். அவர் 2005ல் இந்தச் சோதனை முடிவுகளை வெளியிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2007ல், உயிருள்ள எலிகளின் மூளையில் ஒளி அடிப்படையிலான தூண்டலை மேற்கொண்டு வெற்றி கண்டார்.

தற்போது 'ஆப்டோஜெனெடிக்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த முறை, உலகம் முழுவதும் வேகமாகப் பிரபலமடைந்துள்ளது.

மருத்துவத்தில் உதவி

இது மன மற்றும் நரம்பியல் நோய்கள் குறித்த நமது புரிதலை அதிகரிக்க உதவுகிறது.

இதைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட நினைவுகள், பயம் மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நரம்பியல் அம்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வருகின்றனர்.

மருத்துவத் துறையில், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்குப் பார்வையை மீட்டெடுக்க ஒரு வழியாகவும் இது இருக்கலாம் என்ற கோணத்திலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
 

Leave a Reply