சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார் ஷிரந்தி ராஜபக்ஷ
இலங்கை
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, அங்கிருந்து நாடு திரும்பியுள்ளார்.
மலேசியாவிலிருந்து வந்த MH 179 விமானம் மூலம் நேற்றிரவு சுமார் 11:26 மணிக்கு அவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்ற பின்னர், செப்டம்பர் 16 அன்று அவர் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
நாடு திரும்பும்போது கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில், மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் முன் பிணை கோரி அவர் மனு தாக்கல் செய்த அதே நாளிலேயே அவரது வருகையும் நிகழ்ந்துள்ளது.
‘சிறிலியா சவிய’ (Siriliya Saviya) அமைப்புடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து, காவல்துறையின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த பயணம் அமைந்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஷிரந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரியுள்ளது.






















