மூன்றாம் உலகப் போரை நோக்கி யேர்மனி?
“முதலாளித்துவம் தன்னுடைய தூக்குக் கயிறை தானே வழங்கும்” என்றார் லெனின். இன்று உலகில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது லெனின் கூறியது விரைவில் பலிக்கும் என்பதாகத் தெரிகின்றது. முதலாளித்துவம் தூக்கில் தொங்கும் போது அதனைப் பார்ப்பதற்கு உலகில் மனித குலம் உலகில் இருக்குமா என்பது துணைக் கேள்வி.
மூன்றாம் உலகப் போர் தொடர்பிலான அச்சம் அண்மைக் காலமாக உலகில் பல தரப்புகளில் இருந்தும் எழுப்பப்பட்டு வருகின்றது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் புதிதாக ஒரு ஆயுத மோதல் தொடங்கும் போதும் இத்தகைய அச்சம் எழுவதும், பின்னர் அமுங்கிப் போவதுமாக உள்ளது.
2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீதான ரஸ்யப் படையெடுப்பு ஆரம்பமான நாள் முதலாக, சரியாகச் சொல்வதானால் அதற்குப் பல வருடங்களுக்கு முன்னதாகவே ஐரோப்பா மீதான ரஸ்யப் படையெடுப்பு தொடர்பான செய்திகள் மேற்குலக ஊடகங்களில் பரவலாக வரத் தொடங்கிவிட்டன. 2022இல் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஸ்ய அபாயம் தொடர்பான செய்திகள் வீச்சுக் கண்டன. ரஸ்யாவை போரில் மாத்திரமன்றி, வரலாறில் அதன் வகிபாகத்தை இல்லாமல் செய்துவிடும் நோக்கிலும் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன, தற்போதும் அத்தகைய முன்னெடுப்புகள் தொடர்கின்றன.
ஐரோப்பா மீது படையெடுக்கும் உத்தேசம் எதுவும் தனக்கு இல்லை என ரஸ்யா திரும்பத் திரும்பக் கூறி வருகிற போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள மேற்கு உலகம் மறுத்து வருவதையும் பார்க்க முடிகின்றது.
தன்னைச் சுற்றி வளைத்து ஒரு வியூகத்தை மேற்குலகம் அமைத்து வருகையில் அதனை இயல்பாக எதிர்கொள்ள வேண்டிய நிலையில் ரஸ்யா உள்ளதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. அத்தகைய பதில் நகர்வுகளை ஐரோப்பா மீதான படையெடுப்புக்கான முஸ்தீபாகக் கருதும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பதிலுக்கு தமது தரப்பில் இருந்தும் போருக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றன.
அத்தகைய ஒரு முயற்சியாக இளையோரைப் படையில் சேர்த்து, படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க யேர்மனி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சட்டத்தின் பிரகாரம் 18 வயது நிரம்பிய ஆண்கள் யாவரும் ‘ரிசர்வ்’ படையில் இணைய வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 2026 யனவரி முதல் அரசாங்கத்தால் வழங்கப்படும் இது தொடர்பான படிவத்தை ஆண்கள் யாவரும் கட்டாயமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் விரும்பினால் மாத்திரம் இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். அதேவேளை, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய மறுக்கும் ஆண்கள் மீது நடவடிக்கை பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை ‘ரிசர்வ்’ படையில் இணைவது ஆண்களின் விருப்பத் தேர்வு எனவே கூறப்படுகின்றது. ஆனால், நடைமுறையில் அது அவ்வாறு இருக்காது எனவே தெரிகின்றது.
தற்போதைய நிலையில் யேர்மன் ஆயுதப் படையில் 186,700 பேர் உள்ளனர். 2030ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 260,000 ஆக உயர்த்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அடுத்த வருடத்தில் மேனாள் சோவியத் ஒன்றிய நாடான லித்துவேனியாவில் யேர்மனி நிறுத்தவுள்ள பீரங்கிப் படையில் பணியாற்றுவதற்கு புதிய படையினர் தேவைப்படும் நிலையில் இளையோர் மத்தியிலான விருப்பத் தேர்வாக உள்ள படையில் சேர்த்தல் என்ற திட்டத்தில் மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பிலான அறிகுறிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கிவிட்டன. பல்வேறு விடயங்களைக் காரணம் காட்டி படையில் சேர்வதற்கு விருப்பம் இல்லை எனத் தெரிவித்த இளைஞர்கள் பலருக்கு மீளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது மாத்திரமன்றி, மருத்துவக் காரணங்களால் விலக்கு வழங்கப்பட்ட விடயங்களும் மீளாய்வு செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்ட ஒரு சில மருத்துவக் காரணங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
இந்த நிலையில் யேர்மனியில் உள்ள பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் இளையோரைப் படையில் சேர்க்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தமது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் மாணவர்கள் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை யேர்மனியின் பல நகரங்களிலும் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நான்காவது ஆர்ப்பாட்டம் கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி நூற்றுக் கணக்கான நகரங்களில் நடைபெற்றது. பாடசாலைகளைப் பகிஸ்கரித்த நிலையில் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்டனர். தாங்கள் ‘பீரங்கிகளுக்கு இரையாக விரும்பவில்லை’ என உரத்த தொனியில் தெரிவித்த மாணவர்கள், பொதுவில் போருக்கு எதிரான கருத்துக்களையும் பதிவு செய்தனர்.
ஆனால், போருக்கான சன்னதத்தில் இருக்கும் யேர்மன் அரசாங்கத்தின் செவிகளில் மாணவர்களின் குரல் கேட்குமா என்பது கேள்விக்குறியே. கடந்த நூற்றாண்டில் இரண்டு தடவைகள் யேர்மனிலிருந்து புறப்பட்ட படைகள் ரஸ்யா சென்று பேரழிவுகளை உருவாக்கி இருந்தன. இரண்டாம் உலகப் போரில் மாத்திரம் 27 மில்லியன் சோவியத் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். வரலாற்றில் இருந்து பாடம் கற்க மறுக்கும் யேர்மன் ஆட்சியாளர்கள் தற்போது மூன்றாவது முறையாகவும் ரஸ்யாவை நோக்கிப் படையெடுக்க ஆயத்தமாகி வருகின்றனர். முதல் இரண்டு தடவைகளிலும் ரஸ்யாவிடம் தோற்றுப் போன யேர்மனி, மூன்றாவது முறையாவது வெற்றி பெறலாம் என ஆட்சியாளர்கள் நினைக்கக் கூடும். அல்லது தம்மைத் தோற்கடித்த ரஸ்யப் படைகளைத் தோற்கடித்து. இழந்த தமது பெருமையை மீட்டுக் கொள்வது அவர்களின் இலக்காக இருக்கக் கூடும்.
தற்போதைய நிலையில் யேர்மன் ஆயுதப் படையை ஐரோப்பாவின் மிகவும் பெரிய படையாக மாற்றியமைப்பதில் யேர்மன் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். 2035ஆம் ஆண்டில் உள்நாட்டுத் தேசிய உற்பத்தி வருமானத்தில் 5 வீதத்தை பாதுகாப்புச் செலவினங்களுக்கு ஒதுக்குவதில் நேட்டோ அமைப்பு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளமை தெரிந்ததே. ரஸ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் நாட்டு எல்லையோரமாக உள்ள லித்துவெனியா நாட்டில் அடுத்த வருடத்தில் தனது படைகளை நிரந்தரமாக நிறுத்துவதற்கு யேர்மனி முடிவு செய்துள்ளது. அதேவேளை, தனது ஆயுதப் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.
‘ஜனநாயகத்தைக் காப்பது, சமாதானத்தைப் பேணுவது’ என்னும் பெயர்களிலேயே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்தை யார், யாரிடமிருந்து காப்பது என்பதே இங்கு எழுகின்ற மிகப் பாரிய கேள்வி. ஐரோப்பிய மண்ணில் சமாதானம் பேணப்பட வேண்டுமானால், ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமானால் உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இன்றைய நிலையில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதே யேர்மன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள்தான் எனும் நிலையில் யேர்மனியின் தற்போதைய நடவடிக்கைகள் சமாதானத்தை நோக்கியவை என்பதை அறிவிலிகள் மாத்திரமே ஏற்றுக் கொள்வார்கள்.
சுவிசிலிருந்து சண் தவராஜா





















