ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் புதிய தகவல்
இலங்கை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இன்று (09) தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கண் பாதிப்பு காரணமாக நேற்று (08) சிறைச்சாலை மருத்துவ நிபுணரிடம் அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
இதன்படி, மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் தேசிய கண் மருத்துவமனையின் நிபுணர் ஒருவரிடம் அவரை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கடந்த 7 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஷிரந்தி ராஜபக்சவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






















