சப்-இன்ஸ்பெக்டர் கேரக்டரில் ஹீரோவாக நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர்
சினிமா
ஆர்.அரவிந்த ராஜன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘விடியும் காத்திரு’. படத்தில் முதன்மை கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் அம்ஜதா செரீன், கோபி அயோத்தி, ராகேஷ், பேபி ஸ்ரீஜிதா ஆகியோர் நடித்துள்ளனர். பிரண்ட்ஸ் புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் எம்.ரவிச்சந்திரன் தயாரிக்க அயோத்தி, வளர்மதி ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். சத்யா இசை அமைத்துள்ளார். தாமோதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் அரவிந்தராஜன் கூறியதாவது:-
இந்த படத்தில் 58 வயதான போலீஸ் அதிகாரியான எம்.எஸ்.பாஸ்கர் 2 வருடத்தில் ஓய்வுப் பெறப் போகிற நேரத்தில் ஒரு வழக்கை அவர் விசாரணை செய்கிறார். ஒரு வீட்டில் மர்மமாக கொலை நடந்துள்ளது. வீட்டில் இருக்கும் உடலை அப்புறப்படுத்த முடியவில்லை. அதனால் அந்த வீட்டில் இரவு முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
கதை
அடுத்த நாள் காலை வீட்டை விட்டு வெளியில் வந்தார்களா? அந்த வீட்டில் சந்தித்த சவால்கள் என்ன என்பதுதான் படத்தின் கதை. எம்.எஸ்.பாஸ்கர் ஹீரோவாக கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு சிறப்பாக நடித்ததுடன் படத்தில் சண்டையும் போட்டுள்ளார். நல்ல படம் பார்த்த உணர்வு பார்வையாளர்களுக்கு வரும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளோம். வயது பிரச்சனை கிடையாது. படத்தில் கதையின் நாயகனாக எப்படி பயன்படுத்த முடியுமோ அப்படி எம்.எஸ்.பாஸ்கரை பயன்படுத்தி இருக்கிறோம். கற்பனை கதைதான். படத்தின் கதையை எழுதி முடித்ததும் இந்த கேரக்டரை ஒன்று கமல்ஹாசன் இல்லை எம்.எஸ்.பாஸ்கர் பண்ண வேண்டும் என நினைத்தோம்.
சென்னையில்தான் படத்தின் கதை அமைந்துள்ளது. எல்லாத்துக்கும் சல்யூட் அடித்து கொண்டிருக்கிற போலீஸ் கடைசியில் எம்.எஸ்.பாஸ்கருக்கு சல்யூட் அடிக்கிறது போல் சூழ்நிலை மாறும். ஒரே இரவில் நடக்கிற கதைதான். படத்தில் மொத்தம் 7 கேரக்டர்கள் அதில் 3 பிணங்கள். 48 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். வருகிற 23-ந்தேதி படம் திரைக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.





















