அமெரிக்காவிற்கு உடனடியாக டீசல் வழங்கும் ரஷ்யா - அதிபர் டிரம்ப் அறிவிப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அமெரிக்காவிற்கு ரஷ்யா உடனடியாக டீசல் வழங்கும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது கடுமையான இறக்குமதி வரிகளை விதிக்க முனையும் அமெரிக்க சட்டத்தின் பின்னணியில் இந்த எதிர்பாராத அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் மிக வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நான் இப்போதுதான் நிறைவு செய்தேன்; இதில், அமெரிக்க மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு 3,00,000 டன்னுக்கும் அதிகமான டீசல் எரிபொருளை ரஷ்யா உடனடியாக வழங்குவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது," என்று டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நவம்பர் மாதத்தில் ரஷ்யா மேலும் 5,00,000 டன் டீசலை வழங்கும் என்றும், அதை தொடர்ந்து உடனடியாக 1 மில்லியன் டன் டீசலை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
"கூடுதலாக, தங்கள் டீசல் சுத்திகரிப்பு நிலையங்களின் நிலையை பொறுத்து, ரஷ்யா குறுகிய காலத்திற்குள் 3 மில்லியன் டன் டீசல் எரிபொருளை வழங்கும்," என்று டிரம்ப் தெரிவித்தார்.
நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் முக்கிய அம்சமாக மாறியுள்ள ஈரான் விவகாரம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அதிக எரிபொருள் விலையை அமெரிக்கா எதிர்கொண்டு வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இடைக்காலத் தேர்தல்களில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்வது குடியரசு கட்சிக்கு கடினமாக இருக்கும் என்று பல கருத்துக்கணிப்புகள் கணித்துள்ளன.
ஹார்முஸ் நீரிணை மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடும், ரஷ்யா வழங்கவுள்ள டீசல் விநியோகமும் எரிபொருள் விலையை வெகுவாக குறைக்கும் என்று டிரம்ப் கூறினார்.
"ஹார்முஸ் நீரிணை மீதான நமது முழுமையான கட்டுப்பாடு மற்றும் ரஷ்ய எரிசக்தி குறித்த இந்தச் சிறந்த அறிவிப்பு ஆகியவற்றால், அமெரிக்கர்களுக்கும் ஏன் உலகிற்கே கூட டீசல் விலை மிக வேகமாகவும் பெருமளவிலும் குறையப்போகிறது," என்று அமெரிக்க அதிபர் கூறினார்.





















