அன்புள்ள.. காதல் மட்டுமல்ல காத்திருப்பும் சுகமே.. உலக அஞ்சல் தினம்
சுவிட்சர்லாந்தில் உள்ள போர்ன் நகரில் 1874-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டது.
இந்த நாளை நினைவு கூரும் விதமாக 1969-ம் ஆண்டு முதல் ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ந் தேதியை உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது.
அஞ்சல் சேவையின் முக்கியத்துவத்தையும், மக்களின் அன்றாட வாழ்வில் அஞ்சல் துறையின் பங்களிப்பு பற்றியும் பொதுமக்களிடம் எடுத்துரைப்பது இந்த நாளின் நோக்கமாகும்.
கையடக்க கணினிக்குள் சுருங்கியகாலம் மாறி, இன்று உள்ளங்கை அளவிலான செல்போனுக்குள் முடங்கி கிடக்கிறது மொத்த உலகமும்.
அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த என தொடங்கி, நாங்கள் அனைவரும் நலம், நீங்கள் அனைவரும் நலமா என குசலம் விசாரித்து, என்றும் உங்கள் அன்பு மாறாத என முடிவடையும் கடிதங்களின் வரிகளை இந்த தலைமுறை வாசித்தது உண்டா?
நவீன தொழில் நுட்பங்களின் வளர்ச்சியால் 80-90-ம் வருடத்திய தலைமுறை குழந்தைகள் பெற்ற பல்வேறு நடைமுறை வாழ்க்கை முறைகளை இன்றைய தலைமுறை இழந்தது ஏராளம்.
அதில் முதன்மையானது கடிதங்கள். ஆதி காலம் முதல் அண்மை காலம் வரை மனிதன் மற்றொரு பகுதியில் உள்ள சக மனிதனை தொடர்பு கொள்ள ஏதாவது ஒரு வழியை பின்பற்றி வந்துள்ளான்.
சங்க காலத்தில் புறாக்கள் மூலம் ஓலை அனுப்பி தகவல் தொடர்பை வளர்த்த மனிதர்கள் அடுத்தடுத்த கட்டத்தை தொடும் போது மாற்றங்களை கண்டான்.
ஒற்றர்கள் மூலம் ஓலை அனுப்பிய அரசர்களின் காலம் முடிவுக்கு வந்தபோது இந்தியாவில் ஆங்கிலேயர்களால் அறிமுகம் ஆனது தான் தபால் சேவை.
1712-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி தான் முதன் முதலில் தபால் சேவையையும், ரெயில்வே சேவையையும் இந்தியாவுக்கு கொண்டு வந்தது.
1766-ம் ஆண்டு ராபர்ட் கிளைவ் முதலில் சென்னையில் தபால் சேவையை அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். அப்போது கம்பெனி தபால்களோடு அதிகாரிகள் தங்களது சொந்த தபால்களையும் அனுப்ப அவர் அனுமதித்தார்.
இதைத் தொடர்ந்து 1786ம் ஆண்டு சென்னையில் முதன் முதலாக பொது தபால் சேவை மையம் தொடங்கப்பட்டது.
இவ்வாறாக 236 ஆண்டுகளை கடந்து இந்தியாவில் தபால் சேவை இன்றளவும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் அதிக எண்ணிக்கையில் தபால் நிலையங்களை கொண்ட நாடு இந்தியா ஆகும். இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 89 சதவீதம் தபால் நிலையங்கள் கிராமங்களில் உள்ளன.
தபால் துறைகளில் அரசு காப்பீடு திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள் என மக்களுக்கு பயன்படும் வகையில் நிறைய வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை இந்திய அஞ்சல் துறை எடுத்து வருகிறது.
கடிதம் எழுதுவதும், கடிதங்கள் வாசிப்பதும் மிகவும் சுகமான அனுபவம். எல்லையில் இருக்கும் ராணுவ வீரனும், குடும்பத்திற்காக வெளிநாட்டில் உழைக்கும் மக்களும் தங்கள் குடும்பத்தின் நலன் அறிய தபால் எழுதி விட்டு அவர்களின் பதிலுக்காக காத்துக்கிடந்ததெல்லாம் ஒரு கனாக்காலம்.
இன்று கண நேரத்தில் நாம் நினைக்கும் தகவலை உலகின் எந்த மூலைக்கும் கொண்டு செல்லும் அளவுக்கு நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்து விட்டன.
இ-மெயில் முதல் எஸ்.எம்.எஸ். வரை வளர்ந்த தகவல் சேவை இப்போது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மனதை 'கவர்ந்த'வருக்கு எழுதிய 4 வரி கடிதத்தை கொடுக்க முடியாமல் ஆயுளுக்கும் அலைந்த தலைமுறையும் உண்டு.
என்னதான் தற்போது உடனுக்குடன் செய்தி பரிமாறிக்கொண்டாலும் காத்திருந்து பெரும் கடிதங்கள் தனி அனுபவமே. இது தற்போதைய டிஜிட்டல் உலகில் சஞ்சரித்து சலித்த பலருக்கும் ஒரு புது உணர்வை திறக்கும்.
எனவே தூரத்தில் இருந்து நண்பருக்கோ, உறவினருக்கோ ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்து அவர்களின் பதில் கடிதத்திற்காக காத்திருந்து பாருங்கள். குறிப்பாக தற்போதைய ஜென் இசட் தலைமுறைக்கு இது முற்றிலும் புதியதோர் அனுபவமாக இருக்கும்.





















