வெளிநாட்டுப் பல்கலைக்கழக அனுமதி என்ற பெயரில் மோசடி – CERT எச்சரிக்கை
இலங்கை
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றுத் தருவதாக சமூக ஊடகங்களில் வெளியான விளம்பரங்களை நம்பி ஏமாந்து, பல இலட்சம் ரூபாயை இழந்த பல பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசரச் செயல்நிலைக் குழு (Sri Lanka CERT) தெரிவித்துள்ளது. பயணவழிகாட்டி
மோசடி செய்பவர்கள் உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் போலத் தங்களைக் காட்டிக்கொண்டு, பதிவுக்கட்டணம் மற்றும் முதல் பருவத்திற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலமே மாணவர்கள் சேர்க்கையைப் பெற முடியும் என்று கூறுவதாக CERT சுட்டிக்காட்டியுள்ளது.
தங்கும் இடம் மற்றும் உணவுக்கான செலவுகளை ஈடுகட்ட மாணவர்கள் வேலை தேடிக்கொள்ளலாம் என்றும், அடுத்தடுத்த கல்விப் பருவங்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் மாணவர்களிடம் கூறக்கூடும் என்று அது எச்சரித்தது.
பாதிக்கப்பட்டவர்களை ஒரு மின்னஞ்சல் கணக்கை உருவாக்கவோ அல்லது வாட்ஸ்அப் குழுவில் இணையவோகூட இந்த மோசடிக்காரர்கள் அறிவுறுத்தக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய வழிகள் மூலம் பகிரப்படும் தகவல்களில், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் குறித்த காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் பிற விவரங்கள் இடம்பெறலாம்.
தேவையான பணத்தை அனுப்புவதற்காக அவர்கள் வெளிநாட்டு வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கக்கூடும் என்றும், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எஞ்சியிருக்கும் சந்தேகங்களையும் போக்க அந்த மோசடிக்காரர்கள் முயல்கிறார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே, இணையத்தில் வெளியாகும் இத்தகைய விளம்பரங்களால் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும், சட்டபூர்வமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலம் சேவைகளை வழங்கும் உண்மையான பல்கலைக்கழகப் பிரதிநிதிகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் CERT பொதுமக்களை வலியுறுத்தியது.
மேலும், எந்தவொரு பணப் பரிவர்த்தனையையும் மேற்கொள்வதற்கு முன்னதாக, இத்தகைய நபர்கள் வழங்கும் அனைத்து ஆவணங்களின் நம்பகத்தன்மையையும், பணம் செலுத்தக் கோரப்படும் வங்கிக் கணக்கு விவரங்களையும் கவனமாகச் சரிபார்க்குமாறும் பொதுமக்களை வலியுறுத்தியது.





















