ஒன்டாரியோவில் விமானம் விபத்து - இரண்டு விமானிகள் பலி
கனடா
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், பெர்குஸ் நகருக்கு அருகில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற சிறு ரக விமான விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பெர்குஸ் மற்றும் ஆர்தர் பகுதிகளுக்கு இடைப்பட்ட பீட்டி லைன் மற்றும் வெலிங்டன் சாலை 17 சந்திப்புக்கு அருகில் காலை 10 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விமானம் சோளக்காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளாகித் தீப்பற்றியுள்ளது.
கனடாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம், விபத்துக்குள்ளானது தனிநபரால் உருவாக்கப்பட்ட 'ஸ்கைபோல்ட் பைபிளேன்' ரக சிறு விமானம் என அடையாளம் கண்டுள்ளது.
பெர்குஸ் விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் உள்ளூர் சாகசப் பயிற்சிப் பறப்புக்காக புறப்பட்ட இந்த விமானத்தில் இரண்டு அனுபவமிக்க விமானிகள் பயணித்துள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் வடக்கே சோளக்காட்டில் தலைகீழாக விழுந்து நொறுங்கிய இந்த விமானத்தில் ஏற்பட்ட தீயை அவசரகால மீட்புக் குழுவினர் அணைத்தனர்.
எனினும், விமானத்தில் பயணம் செய்த இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அபாயகரமான பொருட்கள் குறித்த நிபுணர்கள் மற்றும் அவசரகால மருத்துவப் பிரிவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
சனிக்கிழமை மதியத்திற்குள் பொலிஸார் அப்பகுதியை முழுமையாகச் சீரமைத்தனர். விபத்துக்கான சரியான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், போக்குவரத்துப் பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் இது குறித்த மேலதிக விசாரணைகளையும் தகவல்களைச் சேகரிக்கும் பணிகளையும் வரும் வாரங்களில் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளனர்.






















