• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமானம் வெடித்து இறந்த நாயகி......

சினிமா

1976 அக்டோபர் 11-ந்தேதி பம்பாயில் விமான விபத்து. ஏ.சி. திருலோக்சந்தர் தலையில் இடி விழுந்தது போலாகி விட்டது. ‘பத்ரகாளி’ படத்தின் கதாநாயகி ராணிச்சந்திரா, அந்த விமான விபத்தில் தீக்கு இரையானார். அவர் மட்டுமல்ல, அவரது தாயார், மூன்று சகோதரிகள் என குடும்பமே பலியாகி விட்டனர்.
படம் முடியும் வரை வேறு படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது, வெளிநாடுகளுக்கெல்லாம் போகக்கூடாது என்று தெளிவாக அறிவுறுத்தி ஏ.சி.டி அவரை ஒப்பந்தம் செய்திருந்தார்.
மலையாளக் கலைஞர்களுடன் ஓசைபடாமல் சென்று விட்டு அன்று பம்பாய் வந்து சேர்ந்தவர் -இரவு விமானத்தை பிடித்து சென்னை திரும்பினால்தான் மறுநாள் அக்டோபர் -12 அமெரிக்கா கலை நிகழ்ச்சிக்கு அனைவருடனும் புறப்பட முடியும்.
பம்பாய் விமான நிலையத்தில் சென்னை செல்லும் விமானம் ரத்தானதும் பயணிகள், விமான நிலைய அதிகாரிகள் முன் சண்டையிட்டார்கள். மொத்த பயணிகளில் பாதிக்கு மேல் நாங்கள் இன்று சென்னை எப்படியும் போயாக வேண்டும் என்று வற்புறுத்தவே- அதிகாரி இவர்கள் தொல்லை தாங்காமல், ஒரு பைலட்டை பிடித்து- பழுது பார்க்க நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தை பயணத்துக்குத் தயார் செய்து விட்டார் போலும். விதி விளையாடியது. எல்லோரும் விமானத்தில் ஏறி சுமார் ஆயிரம் அடி உயத்தில் பறந்தபோது- கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக திரும்பி பூமியை நோக்கிப் பாய்ந்தது.
பின்பகுதியில்தான் இருக்கும். ‘டேங்க்’ முழுக்க பெட்ரோல் நிரப்புவது எக்ஸ்ட்ரா வெயிட். அதோடு விபத்து நேரங்களில் அதிக பெட்ரோல் இருந்தால் மொத்த விமானமும் பயணிகளுடன் எரிந்து விடும் என்பதால், எந்த ஊரில் இறங்கினாலும் பாதி டேங்க் பெட்ரோல் அங்கு போட்டுக் கொள்வார்கள்.
இந்த விமானத்தில் பாதி டேங்க் பெட்ரோல் இருந்தது. தலைகுப்புற திரும்பியபோது -‘சீட் பெல்ட்’ மாட்டி உட்கார்ந்திருந்த பயணிகள் மீது பெட்ரோல் பீறிட்டு அடித்து, விமானம் தரையை நெருங்கும் முன்பே தீ பிடித்து விட்டது.
தரையில் மோதிய சில விநாடிகளில் குபுகுபுவவென தீ எரிந்து அரையும், குறையுமாக மனித உடல்கள் ஒருபக்கம், தலைகள் ஒரு பக்கம் என சிதறி விட்டன.
அடுத்த பம்பாய் விமானத்தில் சென்னையிலிருந்து போன உறவினர்கள், உடலின் பாகங்களை வைத்து இது யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள்.
ராணி சந்திரா பலியான செய்தியில் ஏ.சி. திருலோக்சந்தர் நிலைகுலைந்து 6 அடி தாண்டிய மனிதர் அப்படியே நாற்காலியில் சரிந்து விட்டார். உடன்பிறவா சகோதரராக -விஜயபுரி வீரன் -நானும் ஒருவன், காக்கும் கரங்கள், ராமு, அன்பே வா படங்களை அவர் டைரக்ட் செய்ய வாய்ப்பளித்த ஏவிஎம் அவர்கள் குமார் சரவணன் சார் ‘மாரல் சப்போர்ட்டாக’ நின்றார்.
கீழ்பாக்கத்திலுள்ள அவர் வீட்டுக்குப் போகிறேன். ‘சிவகுமார்! கைக்கு வந்தது வாய்க்கு எட்டலேங்கிற மாதிரி -5000 அடி படம் பார்த்து விநியோகஸ்தர்கள் எல்லா ஏரியாவையும் வாங்கிட்டாங்கப்பா. அசல் பத்ரகாளியாவே, ஆவேசமா, அகன்ற கண்களை விரிச்சு, தலை முடியை விரிச்சுப் போட்டு, அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் குடுத்திருந்தா அந்தப் பொண்ணு. எனக்கு தெரியாம வெளிநாட்டுக்குப் போய் இப்படி முடிவைத் தேடிட்டாளே!’ என்று அங்கலாய்த்தார்.

எப்போதுமே நிதானத்துக்குப் பெயர் போன ஏ.சி.டி. இது சொந்த படம். கடன்களிலிருந்து மீண்டிட எடுக்கும் படம் என்பதால், இந்தப் படத்தில் படு சுறு,சுறுப்புக்காட்டினார். சிக்கனமாக எடுத்து முடிக்கும் வண்ணம் பட்ஜெட் போட்டுக் கொண்டார்.
‘அமெரிக்கா போறேன். உங்களுக்கு ஏதாவது பெயிண்டிங் மெட்டீரியல் வாங்கிட்டு வரட்டுமா சார்!’ என்றாள். ‘எதுவும் வேண்டாம். நீ நல்லபடியா நிகழ்ச்சிகளை முடிச்சிட்டு வா!’ என்றேன். போனவள் திரும்பி வர முடியவில்லை.
ராணிச் சந்திரா சம்பந்தப்பட்ட சில ஷாட்-கள், பாடல் காட்சியில் இணைக்க, படமாக்க வேண்டும். கிளைமாக்ஸ் காட்சியில் முழுசாக அவர், வில்லனை, கோயிலின் துர்க்கை சிலையிலிருந்து சூலத்தை எடுத்துக் குத்திக் கொல்ல வேண்டும். இவை மட்டுமே படமாக்க வேண்டியிருந்தது.
ராணிச்சந்திரா போன்ற தோற்றத்தில் அதே உயரம், அதே முகச்சாயல் உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று ஒரு ஓவியன் கண்ணோட்டத்தில் இரவெல்லாம் யோசித்தேன். அதிகாலை ஒரு பொறி தட்டியது.
‘பட்டிக்காட்டு ராஜா’ பாடத்தில் ஒரு கிளப் டான்ஸ் ஆடிய பெண் பொருத்தமாக இருப்பாள் என்று தோன்றியது.
அந்தக் கம்பெனிக்கு போன் செய்து விசாரித்து புஷ்பா என்ற டான்சர் விலாசத்தை வாங்கினேன்.
அதிகாலைக் குறும்பு
ஏ.சி.டி வீட்டிலிருந்து கார் அனுப்பி, அந்தப் பெண்ணை வரவழைத்துப் பார்த்தோம். ஒளிப்பதிவாளர் விஸ்வநாத்ராயும் வந்திருந்தார்.
ராணி சந்திரா -புஷ்பா ஒரே உயரம். அவளுக்கு சுருட்டை முடி. இந்த பெண்ணுக்கும் அதே முடி. ராணி சந்திராவுக்கு பட்டையான அகன்ற விழிகள். புஷ்பாவுக்கு முட்டை போன்ற பெரிய கண்கள். மூக்கில் உதடுகளில் சிறு, சிறு வித்யாசம். விஸ்வநாத்ராய், ‘இரவுக்காட்சி’ என்பதால் லைட்டிங்கில் அந்தக்குறை தெரியாமல் படமாக்கி விடலாம்’ என்றார்.
திட்டமிட்டபடி படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இன்னொரு சிக்கல். பாதிப்படத்துக்கு மேல் ராணிச்சந்திரா சொந்தக்குரலில் பேசியுள்ளார். கிளைமாக்ஸில் அவர்தான் அதிக வசனம் பேசியாக வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்து திருமதி செளந்திரம் என்ற அம்மையாரை வைத்து மொத்தப்படத்துக்கும் ராணி சந்திராவுக்கு ‘டப்பிங்’ செய்து விட்டோம்.
அம்மா முன்பு கேலி
கோயிலுக்குள் மூங்கில் தட்டியின் சதுரமான இடைவெளிகளில் வெளிப்படும் ஒளியில், என் மடியில் கதாநாயகி படுத்தவாறு வசனம் பேசுவது படமாக்கப்பட்டது. யாராலும் அதையும் ஊகிக்க முடியவில்லை.
பட்டிதொட்டியெங்கும் படம் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. ‘தமிழ் படத்தில் நடித்துப் பேர் வாங்கணும் சார். சென்னையில் சொந்தமா வீடு வாங்கி, எங்கம்மா, தங்கச்சிங்களோட சந்தோஷமா வாழ ஆசை சார்..!’ என்று சொன்ன ராணிச்சந்திராவின் கனவு, கனவாகவே போய் விட்டது.

 

நடிகர் சிவக்குமார்!
 

Leave a Reply