இலங்கையின் முதல் தமிழ் பெண் நீதிபதியை தெரியுமா?
இலங்கை
இலங்கையின் முதல் தமிழ்பெண் நீதிபதி என்ற வரலாற்று சிறப்பை பெற்றவர் சிவகாமசுந்தரி அர்ச்சுனா.
ஆறு பிள்ளைகளின் தாயாக இருந்தபோதும் சட்ட கல்வியை தொடர்ந்து, நீதி துறையில் உயர்ந்த நிலையை அடைந்த அவரது வாழ்க்கை பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
சிவகாமசுந்தரி அர்ச்சுனா, யாழ்ப்பாணம் வடமராட்சியி உள்ள புலோலி மேற்கின் தம்பசெட்டி கிராமத்தை சேர்ந்தவர்.
சாத்தசிவம் மற்றும் வள்ளிநாயகி தம்பதியின் மகளான இவர், ஆரம்பத்தில் பதுளையில் கல்வி பயின்றார். பின்னர் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்து பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்நிலை பாடசாலையில் கல்வியை தொடர்ந்தார்.
இளமையில் மருத்துவராக வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. ஆனால் அக்கால சமூக சூழலில் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார்.
அதனால் அவரது உயர்கல்வி கனவு முடிவுக்கு வரவில்லை. லண்டன் கலை பட்டத்தை பெற்ற பின்னர் சட்ட துறையில் முன்னேற தீர்மானித்தார்.
ஆறு பிள்ளைகளின் தாயாக சட்ட கல்வி
1969ஆம் ஆண்டு இலங்கை சட்ட கல்லூரியில் இணைந்தபோது, அவருக்கு ஆறு சிறு பிள்ளைகள் இருந்தனர்.
குடும்ப பொறுப்புகளுக்கு மத்தியிலும் கல்வியை தொடர்ந்த அவர், 1972ஆம் ஆண்டு சட்டத்தரணியாக தகுதி பெற்றார்.
பருத்தித்துறை நீதிமன்ற வலயத்தில் சட்ட பணியை தொடங்கிய அவர், சிவில் வழக்குகளில் கவனம் செலுத்தினார்.
மூத்த சட்டத்தரணிகளின் வழிகாட்டுதலும் அவரது விடாமுயற்சியும் நீதி துறையில் வளர்ச்சியடைய உதவின.
வரலாற்று சாதனை
1982ஆம் ஆண்டு சமாதான நீதவான் மற்றும் அதிகாரமற்ற நீதவான் பொறுப்புகளை ஏற்று, நீதி துறை பணிகளில் ஈடுபட தொடங்கினார்.
1987ஆம் ஆண்டு இலங்கையின் முதல் தமிழ் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றினார். பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் 1988 முதல் 1990 வரை சேவையாற்றி, நாட்டின் அரசியல் அமைதியின்மை காரணமாக கொழும்புக்கு மாற்றப்பட்டார்.
அவரது வாழ்க்கை உணர்த்தும் செய்தி
சிவகாமசுந்தரி அர்ச்சுனாவின் பயணம், குடும்ப பொறுப்புகள் பெண்களின் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருக்க வேண்டியதில்லை என்பதை எடுத்து காட்டுகிறது.
சமூக சூழலால் தடைப்பட்ட கனவுகளை மீண்டும் தொடர்ந்தால், புதிய வரலாற்றை படைக்க முடியும் என்பதற்கும் அவரது வாழ்க்கை சான்றாக உள்ளது.






















