அமெரிக்க தொடக்க பள்ளியில் துப்பக்கிச் சூடு - 4 பேர் உயிரிழந்ததால் சோகம்
அமெரிக்க நாட்டின் வடமேற்கு மாநிலமான ஒரேகானில் உள்ள ஒரு தொடக்க பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் "பலர் பாதிக்கப்பட்டனர்" என்று காவல்துறை தெரிவித்த நிலையில், மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவர் கொல்லப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர் "சுட்டுக் கொல்லப்பட்டார்" என காவல்துறை தெரிவித்துள்ளது. "தற்போதைய நிலையில், பலர் பாதிக்கப்பட்டிருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்," என்று உள்ளூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குறைந்தது இரண்டு பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
"தற்போதைக்கு அவர்களின் நிலை தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர்," என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட அமலாக்க துறையை மேற்கோள் காட்டி, மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவர் என நான்கு பேர் கொல்லப்பட்டதாக சி.என்.என். மற்றும் சி.பி.எஸ். நியூஸ் ஆகிய இரு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. காவல்துறை இந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
பெண்ட் காவல் துறையின் செய்தித் தொடர்பாளரான ஷீலா மில்லர், உள்ளூர் நேரப்படி மதியம் 1:00 மணிக்கு ஒரு நெருக்கடியான இடத்திற்குச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், சுமார் இரண்டு நிமிடங்கள் கழித்து போலீசார் அங்கு வந்தடைந்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"சில வினாடிகளுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வானொலி மூலம் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நான் முன்பே கூறியது போல், 1:02 மணிக்கு எங்கள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர், சில கணங்களுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்," என்று அவர் கூறினார்.
சந்தேக நபரைச் சுட்டது யார் என்று தங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றும், அது வழிப்போக்கராக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். சில்வர் ரெயில் தொடக்கப் பள்ளி பூட்டப்பட்டுள்ளதாக பெண்ட்-லா பைன் பள்ளி சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.





















