யாழில் ரூ.190 மில்லியன் செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு
இலங்கை
யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன் ரூபா செலவில் நிறுவுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16.10.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் நடைபெற்றது. இலங்கை நீர்வளச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றியபோதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார். தீவுகள்ஆராயுங்கள்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு நிலத்தடி நீரே முக்கிய ஆதாரமாக விளங்குகின்றது.
கட்டுப்பாடற்ற இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களின் பயன்பாடு, முறையற்ற கழிவகற்றல், அளவுக்கு அதிகமான நீர் உறிஞ்சுதல் போன்ற காரணிகள் நிலத்தடி நீரின் தரத்தையும் கிடைப்பையும் பாதிக்கின்றன. எனவே, நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன், அது குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் பாதுகாப்பானதாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.
புதிதாக அமைக்கப்படும் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு, நீரின் அளவு மற்றும் தரத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணித்தல், மாசுபாட்டுக்கான ஆபத்துகளைக் கண்டறிதல், நிலத்தடி நீர் வளங்களை வரைபடமாக்குதல், குழாய்க் கிணறுகளை அமைப்பதற்கான தொழில்நுட்ப மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் நிலத்தடி நீரை மீள்நிரப்பும் திட்டங்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குழாய்க் கிணறுகள் அமைப்பதற்கான அனுமதி மற்றும் அவற்றை அமைப்பதில் ஈடுபடுவோரின் பதிவுகள் தொடர்பான ஏற்பாடுகள் உள்ளபோதும், வடக்கு மாகாணத்தின் தனித்துவமான நிலத்தடி நீர் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.
எனவே, குழாய்க் கிணறுகளை அமைத்தல், அவற்றின் பயன்பாடு, நீர் எடுக்கும் அளவு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய திருத்தங்களுடன் கூடிய புதிய வர்த்தமானி அறிவித்தலை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சரிடம் ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
மழைநீரைச் சேமித்தல், இயற்கையான நீர்வழிகளைப் பாதுகாத்தல், நிலத்தடி நீரை மீள்நிரப்புதல் போன்ற நடவடிக்கைகளை அறிவியல் அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், நீர்வளப் பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாமல், ஆய்வுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிலத்தடி நீரைப் பாதுகாப்பது அரச நிறுவனங்களின் பொறுப்பு மட்டுமல்ல, விவசாயிகள், உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய கடமையாகும்.
இன்று ஆரம்பிக்கப்படும் இந்த முயற்சி நீண்டகாலப் பயனைத் தரும் வகையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத் தலைமுறையினருக்குப் பாதுகாப்பான நீர்வளத்தை ஒப்படைப்பதில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக்க படபெந்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், கௌரவ பிரதியமைச்சர், யாழ்ப்பாண மாவட்டச் செயலர், நீர்வளச் சபையின் அதிகாரிகள் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.






















