• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை வனப்பெருமையின் ஓர் அடையாளம் சரிந்தது

இலங்கை

இலங்கையின் மிகவும் பிரபலமான காட்டு யானைகளில் ஒன்றான ‘கவன்திஸ்ஸ’ என்ற தந்தம் கொண்ட யானை உயிரிழந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு உள்ளாகி, சுமார் ஒரு மாத காலமாக கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த யானை உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

சுமார் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டதாகக் கருதப்படும் கவன்திஸ்ஸ யானை, சுமார் 11 அடி உயரத்தைக் கொண்டிருந்தது. 

அதன் தந்தங்கள் ஆறு அடிக்கும் அதிகமான நீளத்தைக் கொண்டிருந்தன. 

இலங்கையில் உயிருடன் வாழ்ந்த மிக உயரமான தந்தம் கொண்ட காட்டு யானைகளில் ஒன்றாக இது கருதப்பட்டது.

2008 ஆம் ஆண்டு முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த யானைக்கு, 2015ஆம் ஆண்டு இலங்கையின் பண்டைய மன்னரான கவன்திஸ்ஸ மன்னரின் பெயர் சூட்டப்பட்டது. 

கவன்திஸ்ஸ மன்னர், மன்னர் துட்டகைமுனுவின் தந்தையாவார்.

குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ, உஸ்கல மற்றும் சியம்பலங்கமுவ ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக நடமாடி வந்த இந்த யானை, வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் மற்றும் யானை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

மிகப்பெரிய உருவத்தைக் கொண்டிருந்த போதிலும், கவன்திஸ்ஸ யானை எவரையும் கொன்றதாகவோ அல்லது காயப்படுத்தியதாகவோ பதிவுகள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் பாதிப்பு

கடந்த செப்டெம்பர் மாதம், கவன்திஸ்ஸ யானையின் வலது முன்காலுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருப்பதை வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டறிந்ததைத் தொடர்ந்து, அதன் இறுதிக்கட்டப் போராட்டம் ஆரம்பமானது.

இதையடுத்து, செப்டெம்பர் 24 ஆம் திகதி வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சைகளை ஆரம்பித்தனர். 

ஆரம்பத்தில் யானை குணமடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

எனினும், பின்னர் அதன் உடல்நிலை மோசமடைந்ததுடன், மேலதிக உடல்நலச் சிக்கல்களும் ஏற்பட்டன. 

உணவு உட்கொள்வதையும் யானை குறைத்துக்கொண்டது.

இந்நிலையில், ஒக்டோபர் 16ஆம் திகதி சியம்பலங்கமுவ பகுதிக்கு அருகிலுள்ள வயல் நிலமொன்றில் கவன்திஸ்ஸ யானை விழுந்து கிடப்பது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து, வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் அவசர சிகிச்சை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

யானைக்குச் சிகிச்சையளிப்பதற்காக தாய்லாந்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவ நிபுணர்களின் உதவியையும் அரசாங்கம் கோரியிருந்தது. எனினும், சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் யானை உயிரிழந்துள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை

கவன்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு, இலங்கையில் எஞ்சியுள்ள புகழ்பெற்ற தந்தம் கொண்ட காட்டு யானைகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.

மனித – யானை மோதல், வாழிட இழப்பு மற்றும் திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட காரணிகள் இலங்கையின் காட்டு யானைகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக அதன் நடமாட்டத்தை அவதானித்து வந்த வனவிலங்கு ஆர்வலர்களைப் பொறுத்தவரையில், கவன்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு இலங்கையின் இயற்கை மரபுரிமையின் ஈடுசெய்ய முடியாத ஓர் அடையாளத்தை இழந்த துயரச் சம்பவமாகக் கருதப்படுகிறது.
 

Leave a Reply