அதிகரித்து வரும் குற்றங்களால் ஸ்கார்பரோ குடியிருப்பாளர்கள் பீதியடைந்துள்ளனர்
கனடா
ஸ்கார்பரோ மற்றும் மார்க்கமில் உள்ள தமிழ் நகைக் கடைகளை குறிவைத்து வாகனத் திருட்டுகள் மற்றும் பகல்நேரக் கொள்ளைகள் சமீபத்தில் அதிகரித்திருப்பது குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 6, 2024 அன்று கனேடிய தமிழ் வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்கார்பரோ - ரூஜ் பார்க்கின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள், கடுமையான பிணைமீட்புச் சட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தினார், “மீண்டும் மீண்டும் குற்றவாளிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு, அடுத்த நாள் அதே குற்றங்களைச் செய்கிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இந்த அழுத்தமான பாதுகாப்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் எதிர்வரும், செவ்வாய்கிழமை டிசம்பர் 17 ஆம் திகதியன்று மாலை 7:30 மணிக்கு மால்வெர்ன் குடும்ப வள மையத்தில் சமூகப் பாதுகாப்பு பொதுக் கூட்டமொன்றை நடத்துகிறார். குடியிருப்பாளர்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்டு தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். இப்பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக வாகனத் திருட்டு மற்றும் பிணை சீர்திருத்த இணை அமைச்சர், கிராஹம் மக்கிரெகர் மற்றும் 42 பிரிவின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.























