முல்லை மாவட்டசெயலர் மற்றும் கரைதுறைப்பற்று உதவி பிரதேசசெயலரைச் சந்தித்த ரவிகரன் எம்.பி
இலங்கை
முல்லைத்தீவு மாவட்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப்பிரதேசசெயலாளர் ஆகியோரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மிக முக்கியமாக இச்சந்திப்பில் கேப்பாபுலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளின் விபரங்களை மாவட்டச்செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேசசெயலாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கோரியிருந்தார்.
குறிப்பாக கடந்த 07.01.2026அன்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றபோது கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இவ்வாறு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத்தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும் 4பேருக்குரிய 100ஏக்கர் மத்தியவகுப்புக்காணிகளுமாக மொத்தம் 59பேருக்குரிய 159.5ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் உண்மைநிலையினை சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன்போது கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விடயம்தொடர்பாக அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் இராணுவத்தினரிடம் கோரப்பட்டுள்ளது.
இத்தகையசூழலில் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 159.5ஏக்கர் மக்களின் காணிகள் தொடர்பான உண்மையான விபரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் திட்டமிட்டுள்ளார்.
அந்தவகையிலேயே கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விபரங்கள், ஆவணங்கள் என்பவற்றை முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேசசெயலாளர் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.
இந்நிலையில் விரைவாக அந்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை கையளிப்பதாக மாவட்டச்செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் ஆகியோரால் இதன்போது பதில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் கவனஞ்செலுத்தப்பட்டிருந்தன. அத்தோடு முல்லைத்தீவு மாவட்டசெயலக திட்டமிடல் பிரிவினர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிகமாவட்ட செயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன் ஆகியோரையும் இதன்போது சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மாவட்டத்தின் அபிவிருத்திவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.























