நடிப்புச் சக்கரவர்த்தியின் நந்தவனத்து ரகசியங்கள்
சினிமா
அவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தவர். அதிகாலையில் தொடங்கும் அவரது நேர்த்தியான அன்றாடப் பணிகள் முதல், உலகமே வியக்கும் அவரது திரைச் சாதனைகள் வரை அனைத்தும் ஒரு பாடப்புத்தகத்திற்கு இணையானவை. தனது ரசிகர்களை 'பிள்ளைகள்' என்று அன்போடு அழைத்த இந்தச் சிம்மக்குரலோனின் வாழ்வில் ஒளிந்திருக்கும் ஆச்சரியமூட்டும் மற்றும் சில சுவாரசியமான பக்கங்களை இங்கே காண்போம்.
ஷூட்டிங் முடிந்து நள்ளிரவில் வீட்டுக்கு எத்தனை மணிக்கு வந்து படுத்தாலும், காலை 6:00 மணிக்கு எழுந்து விடுவார்.
காலை 6:00 மணிக்கு மேல் அவர் உறங்க மாட்டார்.
1990களில் தாடி வைப்பதற்கு முன் வரை தினமும் ஷேவ் செய்வார்.
சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் போதும், சூரக்கோட்டைக்கு விடுமுறையாகச் செல்லும் போதும் மட்டும் தான் ஷேவ் செய்யாத சிவாஜியைப் பார்க்க முடியும்.
தினமும் இருவேளை குளிப்பார்; எந்த சீசனாக இருந்தாலும் குளியல் பச்சைத் தண்ணீரால்தான்.
குளிர்ந்த மோர், காபி, அதிலும் பிளாக் காபி ஆகியவை இவர் விரும்பி அருந்துகின்ற பானங்கள்.
வேர்க்கடலை உருண்டைகளை விரும்பிச் சாப்பிடுவார்.
தினந்தோறும் காலை, மாலை என இரு வேளைகளிலும் செய்தித்தாள்களை வாசிப்பார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் செய்திகளுக்கே முதலிடம் கொடுப்பார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விமானப் பயணத்தின் போது மட்டும் அதிகம் பேசமாட்டார்.
பல சமயங்களில் விமானத்தில் ஏறி அமர்ந்த உடனேயே கண்களை மூடிக்கொண்டு உறங்கி விடுவார்.
காரில் பயணம் செய்யும்போது சினிமா, அரசியல், பொதுவான விஷயங்கள் என நிறையப் பேசுவார்.
மிக நீண்ட தூரக் கார் பயணத்தின்போது நிறைய பாடல்கள் கேட்பார்; அதில் 'கப்பலோட்டிய தமிழன்' படப் பாடல்கள் நிச்சயம் இருக்கும்.
சிவாஜிக்குத் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகள் சரளமாகப் பேசத் தெரியும்.
அந்தந்த மொழிக்காரர்களிடம் அவர்களின் மொழியிலேயே பேசி அசத்துவார்.
சிவாஜி எந்த இடத்திற்குச் சென்றாலும் சுற்றுப்புறத்தைக் கூர்மையாகக் கவனிப்பார்.
வீட்டிலோ, வெளியிலோ, எந்த இடத்திலும் அமர்வதற்கு முன் தான் உட்காரப்போகும் இருக்கை, தலை மேல் சுழலும் மின்விசிறி என ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான் உட்காருவார்.
ரஷ்யா தவிர கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வெளிநாடுகளுக்கும் சென்றிருக்கிறார்.
ஒவ்வொரு நாட்டின் மக்கள் அணியும் விதவிதமான தொப்பிகளைச் சேகரித்து அன்னை இல்லத்தில் பத்திரமாகப் பொக்கிஷம் போல் வைத்திருந்தார்.
எந்த ஊர், எந்த மாநிலம், எந்த நாடு சென்றாலும் அந்தப் பகுதியின் சிறப்பம்சங்கள், அங்குள்ள மக்கள், அவர்கள் செய்யும் தொழில், அந்தப் பிரதேசத்தின் சிறப்பு உணவு வகைகள் என்கின்ற தகவல்களை அளித்து உடன் வருவோரை அசத்துவார்.
1986ல் பெல்ஜியம் பல்கலைக்கழகமும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும் அவரது கலைச் சேவைக்காக டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
தமிழ் திரையுலகில் எம்.கே.டி. பாகவதருக்குப் பின் கருப்பு வெள்ளையில் ஐந்து வெள்ளி விழாப் படங்களை—பராசக்தி, பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பாசமலர், பட்டிக்காடா பட்டணமா—கொடுத்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.
தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே கருப்பு வெள்ளை படங்களில் முதல் வெளியீட்டிலேயே ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மொத்த வசூல் அளித்த படம் பட்டிக்காடா பட்டணமா.
2,593 இருக்கைகளைக் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் திரையரங்கில், மூன்று 100 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களையும், ஒன்பது 50 நாட்களுக்கு மேல் ஓடிய படங்களையும் கொடுத்த ஒரே நடிகர் நடிகர் திலகம் ஆவார்.
நமது இந்தியத் திருநாட்டின் மகத்தான தினங்களான சுதந்திர தினத்தன்று 7 சிவாஜி கணேசன் படங்களும், குடியரசு தினத்தன்று 13 சிவாஜி கணேசன் படங்களும் வெளியாகியுள்ளன.
பண்டிகை தின ஹீரோ என்றாலும் அது சிவாஜி தான்; பொங்கல் வெளியீடுகளாக 23 திரைப்படங்களும், தமிழ்ப் புத்தாண்டு வெளியீடுகளாக 26 திரைப்படங்களும், தீபாவளி வெளியீடுகளாக 42 திரைப்படங்களும் கொடுத்துள்ளார்.
கிரிக்கெட், கால்பந்து இரண்டு விளையாட்டுகளும் மிகவும் பிடித்தமானவை.
கிரிக்கெட்டில் கவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீகாந்த் ஆகியோரின் தீவிர ரசிகர்.
சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சமயங்களில் நேரில் சென்று ரசித்து மகிழ்வார்.
நடிகர் திலகம் தனது ரசிகர்களைப் பிள்ளைகள் என்றுதான் கூறுவார்.
ரசிகர், ரசிகர் மன்றக் கடிதங்களையெல்லாம் தம்பி சண்முகம் தான் கவனித்துக் கொள்வார்.
சில சுவாரசியமான, வித்தியாசமான, முக்கியமான கடிதங்களை மட்டும் அண்ணனின் கவனத்திற்குக் கொண்டு செல்வார்.
Senthilvel Sivaraj






















