• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விசா தாமதம்- சிட்னியில் நடைபெற இருந்த மோகன்லால் கலை நிகழ்ச்சி ரத்து - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்

சினிமா

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய மற்றும் மலையாளி ரசிகர்களை மகிழ்விப்பதற்காக, இசை, நடனம் மற்றும் நகைச்சுவை நிறைந்த ஒரு பிரம்மாண்ட கலை விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நடிகர் மோகன்லால் தனது 50 ஆண்டுக்கால திரைப்பயணத்தை முன்னிட்டு, அமெரிக்கா, லண்டன் போன்ற உலக நாடுகளைத் தொடர்ந்து இந்த ஆஸ்திரேலியப் பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். 'காயல் ஈவென்ட்ஸ்' நிறுவனம் மூலம் சிட்னியின் புகழ்பெற்ற 'நார்வெஸ்ட் கன்வென்ஷன் சென்டர்' அரங்கில், நேற்று இந்த நிகழ்ச்சி நடைபெறவிருந்தது.

ஆனால், நடிகர் மோகன்லாலுக்கு உரிய நேரத்தில் விசா கிடைக்காத காரணத்தால், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கலை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சிட்னி நகரில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிக்கு பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மோகன்லாலின் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்காக பாடகி சித்ரா, மனோஜ் கே.ஜெயன் மற்றும் பிற கலைஞர்கள் ஆஸ்திரேலியாவிற்குப் பாதுகாப்பாகச் சென்றடைந்தனர். ஆனால், மோகன்லாலுக்கு உரிய நேரத்தில் விசா கிடைக்காததால் ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது குறித்து சிங்கப்பூரில் இருந்து மோகன்லால் உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் கவலையை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. நான் சோகமான சூழ்நிலையில் இருக்கிறேன்.

திரை உலகிற்கு வந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவிலிருந்து அதிக வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகர் நானாகத்தான் இருப்பேன். ஆனால், என் வாழ்க்கையில் முதல்முறையாக எனக்கு விசா கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தனது விசா சிக்கல் குறித்துப் பேசிய அவர், "இது தொழில்நுட்பத்தினாலோ, எழுத்து பிழையாகவோ அல்லது செயற்கை நுண்ணறிவினாலோ ஏற்பட்ட சிக்கலாக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் யாரையும் நான் குறை கூற விரும்பவில்லை.

முழு பழியையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். இது என் தவறு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார். இந்தச் சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply