தனது நாற்பதாண்டு கால நண்பர் என்று எம்.ஜி.ஆரை கருணாநிதி குறிப்பிடுவார்
சினிமா
அரசியல் களத்திலே எதிரெதிரே நின்று விவாதங்களில் ஈடுபட்டாலும் அறிஞர் அண்ணாவின் தம்பிகளான இரண்டு பேருக்கும் இடையே அரசியலைத் தாண்டிய ஆழமான நட்பு நிலவி வந்தது. தனது நாற்பதாண்டு கால நண்பர் என்று எம்.ஜி.ஆரை கருணாநிதி குறிப்பிடுவார். எம்.ஜி.ஆரும் மேடைகளில் ‘நண்பர் கலைஞர் கருணாநிதி’ என்றே விளித்து பேசுவார்.
அரசியல் உக்கிரம் தகித்த போதும் அதையும் தாண்டிய நட்பு குளிர்ச்சி இருவருக்கும் இடையே நிலவியதற்கு சான்றுகள் ஏராளம். அதில் ஒரு சம்பவம்.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசைக் கண்டித்து 1982-ம் ஆண்டு ‘நீதிகேட்டு நெடும் பயணம்’ என்ற பெயரில் மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுடன் பாத யாத்திரையாக சென்றார். தொடர்ந்து நடந்ததில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. காலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. அப்படியும் பயணத்தை தொடர்ந்தார்.
விஷயம் முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக தொலைபேசி மூலம் கருணாநிதியை தொடர்பு கொண்டார். உடல் நலன் குறித்து அக்கறையோடு விசாரித்தார். அதோடு, கருணாநிதியின் உடல் நிலையை கவனிக்க ஒரு மருத்துவர் குழுவையும் அனுப்பி வைத்தார். இது இருவருக்குமான நட்பின் அடையாளம் மட்டுமல்ல, தனது அரசை எதிர்த்து பாத யாத்திரை போகிறாரே? தனது அரசியல் எதிரியாயிற்றே? என்றெல்லாம் கருதாமல் கருணாநிதியின் உடல் நலனில் எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையையும் அவரின் அன்பு உள்ளத்தையும் காட்டும் நிகழ்ச்சி இது.
இருவருக்கும் இடையிலான நட்பின் ஆழத்துக்கு இன்னொரு சம்பவம்.
‘எங்கள் தங்கம்’... எம்.ஜி.ஆரை ரசிகர்கள் இப்படி அழைப்பதற்கு காரணமான அவர் நடித்து மேகலா பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட படம். மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் கடனை ‘எங்கள் தங்கம்’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தால் அடைத்ததாக அதன் வெற்றி விழாவில் முரசொலி மாறன் குறிப்பிட்டார்.
- தி இந்து























