சதி லீலாவதி செய்த சதிகளை சுவாரஸ்யமாக எழுதுகிறார் இப்படி...
சினிமா
1966 ஆம் ஆண்டில் தான் பொறுப்பாசிரியராக இருந்து நடத்திய சமநீதி இதழில் சுவாரஸ்யமான அந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
பதவிப்போராட்டம் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் சதி லீலாவதி செய்த சதிகளை சுவாரஸ்யமாக எழுதுகிறார் இப்படி...
நான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்த நேரம். வெளியுலகத்தைப் பற்றியோ, மக்கள் மனோபாவம் எப்படியிருக்கும் என்பதையோ, எந்தெந்தக் குணத்தினர், எப்படிப்பட்ட தரத்தினர் என்பதையோ சிறிதும் தெரிந்துக்கொள்ளாத, தெரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தேன். (இப்போது எல்லாம் தெரிந்துக் கொண்டுவிட்டேன் என்று கருதுவதாக யாரும் எண்ணவேண்டாம்.) உலக அனுபவம் சிறிதும்பெறாத நிலையில் இருந்தேன் என்பதையே குறிப்பிடுகிறேன்.
இத்தகைய நிலையில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் நல்ல வசூலோடும், வெற்றியோடும் நடத்திக் கொண்டிருந்த 'பதிபக்தி' என்ற நாடகத்தைச் சினிமாவாக எடுக்கத் தீர்மானித்துவிட்டார்கள். வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்ற செய்தி விபத்தைப்போல் எங்கள் செவிகளில் விழுந்தது. படம் எடுப்பதனால் நாடகக் கம்பெனியை நிறுத்திவிடப்போவதாகவும், அவர்களை ஒவ்வொன்றாகத் தொடர்ந்து படமெடுக்கத் தீர்மானித்துவிட்டதாகவும் சொல்லப்பட்டதுதான் அந்தச் செய்தி. அது விபத்தைப் போன்று என்னையும், என் தமயனாரையும் உலுக்கியது.
“ஆமாம் நாடகக் கம்பெனியை நிறுத்திவிட்டால் என்ன? படம்தான் எடுக்கிறார்களே! அதில் வேலை (வேடம்) கிடைக்காதா என்ன? அந்த நம்பிக்கை இருக்குமல்லவா?”: என்று கேட்டுவிடாதீர்கள்! நாடகக் கம்பெனி என்றால் தினமும் நாடகம் நடக்கும்: மாதம் மாதம் சம்பளமும் கிடைக்கும். எப்போதோ படம் எடுப்பார்கள்; என்றோ ஓரிரு நாள் வேலையிருக்கும். மாதச் சம்பளம் எப்படிக் கிடைக்கும்! அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனால், எதிர்பார்க்கவிட்டால் எப்படித்தான் வாழ்வு...? எங்களுக்கு இந்த நல்ல குணம் (தேவையற்ற குணம்) யாரிடமாவது சென்று வேலை கேட்கும் பழக்கமும் கிடையாது; எப்படிக் கேட்பது என்றும் தெரியாது. அழுதபிள்ளைதான் பால்குடிக்கும்! சரி, பால் எந்தத் தாயிடமிருந்து கிடைக்கும் என்றாவது குழந்தைக்குத் தெரியவேண்டுமே!
வறுமையின் காரணமாக பால் கொடுக்கும் சக்தியை இழந்துவிட்ட ஒரு தாயிடம் அதன் குழந்தை எவ்வளவு பெரியதாக அழுதால்தான் என்ன, எத்தனை நேரம் அழுதால்தான் என்ன? அந்த நிலையில் உள்ள குழந்தைகளைப் போன்றவர்களானோம் நாங்களும். ஒரு நாள் எதிர்பாராதவிதமாக எங்களுடைய நாடக ஆசிரியரும், எம்.கே.ராதா அவர்களின் காலஞ்சென்ற தந்தையுமான எம்.கந்தசாமி முதலியார் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்... எதிர்காலத்திற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று எப்போதும்போல அக்கறையோடும், அன்போடும் அவர் விசாரித்தார். “படம் எடுக்கப்போகிறார்கள்... அதிலே ஏதாவது வேடம் கிடைக்குமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.” இதுவே எங்கள் பதில்
‘இல்லை’ என்று சொல்வதற்கும் வெட்கம்! “இருக்கிறது” என்று சொல்வதற்கும் அச்சம்!
அவர் சொன்னார், “நல்லவேடம் கொடுத்தால் நடிக்கலாம் இல்லையா? ஒரு பட முதலாளி ‘சதிலீலாவதி’ என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். அதற்கு நான்தான் உரையாடல் எழுதப் போகிறேன்! எல்லிஸ் ஆர்.டங்கன் என்கிற அமெரிக்க டைரக்டர் படத்தை இயக்கப்போகிறார். அதில் ஒரு துப்பறிபவன் வேடம் இருக்கிறது. சண்டைக் காட்சிகள் எல்லாம் அந்த வேடத்திற்கு உள்ளன. நீ வருவதாயிருந்தால் அந்த வேடத்தை உனக்குத்தர ஏற்பாடு செய்கிறேன்” என்றார்
கரும்பு தின்னக் கூலியா கேட்போம்! 'பத்தோடு பதினொன்று அத்தோடு இதொன்று' என்ற நிலையிலிருந்த எனக்குத் துப்பறிபவன் வேடம்!
'பதிபக்தி' என்ற நாடகத்திலும் 'துப்பறியும் சந்தானம்' என்ற ஒரு வேடம் உண்டு. அந்த வேடத்தை ஏற்று நடிப்பவர் எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்த ஆசிரியரான காளி என். ரத்தினம் அவர்கள். அந்த நாடகம் பெருமை பெறக்காரணமாக இருந்த சிறப்புகளில் ஒன்று காளி. என். ரத்தினம். அவர்கள் தாம் ஏற்றுக்கொண்ட துப்பறியும் வேடத்திற்கேற்ப நாடகத்தின் இறுதிக்கட்டத்தில் போடும் சண்டைக் காட்சி தவிர கே.பி. கேசவன் அவர்களின் குடிகார நடிப்பும், நல்ல கதையமைப்பும் அதன் வெற்றிக்குக் காரணங்களாகும்.
'சதிலீலாவதி' யின் கதையும் ‘பதிபக்தி’போன்றே ஒரே மாதிரியான பல சம்பவங்களைக் கொண்ட கதைதான். 'பதிபக்தி' யின் கதாசிரியர் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். “சதிலீலாவதி”யின் கதை ஆசிரியர் எஸ்.எஸ். வாசன். என்னுடைய ஆசிரியர் நடிக்கிற அதே வேடம். அதேபோன்ற படத்தில் எனக்குக் கிடைக்கிறதென்றால் எப்படி அதை வரவேற்காமல் இருக்க முடியும்? “எப்பொழுது வரவேண்டும்?” என்றுதான் என்னால் கேட்க முடிந்தது. “முதலாளி வந்துவிடுவார்கள்; வந்ததும் பாரு, ஒப்பந்தம் செய்து வைக்கிறேன் ’’ என்றார்.
அதன்பின், படத்தின் முதலாளி வந்துவிட்டார் என்ற செய்தி வருகிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது என்றால் மிகையாகாது.
எஸ்.எஸ். வாசன்எங்கள் நாடக் கம்பெனி நாடகங்கள் சென்னை ராயல் தியேட்டரில் (சால் கொட்டர்ஸ்) தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது. நாங்கள் வேறொரு கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்படப் போகிறோம் என்ற செய்தி எங்கள் இருவரையும், எங்கள் தாயாரையும் தவிர வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை. நாங்களும் சொல்லவில்லை. வேண்டுமென்றேதான் மறைத்து வைத்திருந்தோம். ஒருநாள் ஆசிரியர் எம்.கே. அவர்களிடமிருந்து தகவல் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் எங்களை அழைத்துப்போய் ஒப்பந்தம் செய்துவைத்து முன்பணம் வாங்கித் தருவதாக கிடைத்த தகவல்.
எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காத்திருந்தோம்; காலமும் வந்தது, கைநீட்டிப் பணம் வாங்க நானும், என் தமையனாரும் நாடக ஆசிரியரோடு சென்றோம். ஒரு ஓட்டலில் அந்த முதலாளி தங்கியிருந்தார். அவர் பெயர் மருதாசலம் செட்டியார்; கோவையைச் சேர்ந்தவர்; நல்ல உயரம், உயரத்திற்கு ஏற்ற பருமன், உருவத்திற்கு ஏற்றவாறு கணீரென்று ஒலிக்கும் குரல். அவர் வந்தார். எங்கள் இருவரையும் பார்த்தார்.
பிறகு ஆசிரியரும், அவரும் பேசினார்கள். எங்களுக்கு ஒரு சம்பளமும் நியமிக்கப்பட்டது. முதலாளி முன்பணம் கொடுப்பதற்காகப் பணமெடுக்க விரைந்து சென்றார். சட்டைக்கெல்லாம் நூறு ரூபாய் நோட்டு என்று சொல்லப்படும் ஒரு தாளுடன் அவர் வந்தார். அவர் எங்களிடம் அதைக்கொடுக்க வந்தபோது நாங்கள் ஆசிரியரைப் பார்த்தோம். ஆசிரியர் எங்களுடைய எண்ணத்தைப்புரிந்துக் கொண்டு அதைத் தம்கையில் வாங்கி எங்களிடம் கொடுத்தார். ஆசிரியர் “உங்களுக்கு நூறு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருக்கு. இது உங்களுக்கு முன்பணம்‘ என்று சொன்னார். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. நாடகத்திலே ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையான ஒரு நூறு ரூபாய் நோட்டை கூடக் கண்டதில்லை. அதிலும் ஒரே நேரத்தில் மொத்தமாக நூறு ரூபாய் முன் பணம்! நெஞ்சிலே ஏதோ ஒன்று கிளர்ந்து நெஞ்சை முன்னால் தள்ளியது போன்ற உணர்ச்சி. இதற்குத்தான ‘மகிழ்ச்சி விம்மல்’ என்று பெயரோ?
அண்ணனை நான் பார்த்தேன். அண்ணன் என்னைப் பார்த்தார். மருதாசலம் செட்டியார் என்ன நினைத்தார் என்று தெரியாது. முதல் படம் தானே! கொடுக்கிறதை வாங்கிக்குங்க முன்னே பின்ன இருந்தாலும் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கத்தான் வேணும் ...அப்புறம் தருவோம். நல்லா நடிச்சுப்பெயர் வாங்குங்க...” என்று கூறினார் அவர். அவர்கள் இருவருக்கும் நமஸ்காரத்தைச் சொல்லி விட்டுப் புறப்பட்டோம். “வணக்கம்“ சொல்வதற்கு எங்களுக்கு என்ன தெரியும்? ஆசிரியர் கீழே வாசல் வரை வந்து வழியனுப்பினார்.
எங்களுக்கு இப்படிப்பட்ட பேருதவியைச் செய்தாரே, அதற்காக அவர் எங்களிடமிருந்து உபசாரத்திற்காக நாங்கள் சொல்லவேண்டிய ஒரு நன்றி வார்த்தையைக் கூட எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு உதவிசெய்ய வேண்டியது ஒரு கடமை என்று கருதியவராக எந்தவித மறுமொழியையும் எதிர்பார்க்காமல் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு போய்விட்டார். நாங்கள் வண்டியில் செல்வதாவது? அதற்கு ஏது எங்களிடம் காசு! நானும் அண்ணனும் நடந்தே வீடுநோக்கி புறப்பட்டோம்.
Chandran Veerasamy























