• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரையுலகம் இருண்டு கிடந்த போதெல்லாம், தனது உழைப்பால் ஒளி பாய்ச்சிய அபிநயச் சூரியன்

சினிமா

திரையுலகம் இருண்டு கிடந்த போதெல்லாம், தனது உழைப்பால் ஒளி பாய்ச்சிய 'அபிநயச் சூரியன்' அவர். விடியற்காலையில் உதிக்கும் கதிரவன் எப்படி தடையின்றித் தன் கடமையைச் செய்கிறானோ, அப்படியே மூன்று ஷிப்ட் வேலைகளிலும் சோர்வறியாது சுழன்றவர் நம் அண்ணன்.

ஒரு படைப்பாளியின் கற்பனைக்குத் தடை போடாத கங்கை அவர். "உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைச் சொல்லுங்கள், அதைச் செய்கிறேன்" என்று தன்னை ஒரு களிமண்ணாக இயக்குநர்களிடம் ஒப்படைத்த அந்தப் பண்பு, இமயமலையை விட உயர்ந்தது. பாடலின் வரிகளிலோ, காட்சியின் அமைப்பிலோ தலையிடாத அந்த அர்ப்பணிப்பு, உண்மையான கலை ஞானிகளுக்கே கைவடும்.

பத்து நாட்கள் தூக்கமில்லாமல், பசி மறந்து சுற்றிய ஒரு மனிதனின் சோர்வை, 'பாசமலர்' கிளைமாக்ஸில் அப்படியே தன் முகத்தில் கொண்டு வந்தாரே, அது வெறும் நடிப்பு அல்ல; அது ஒரு உடல் மொழித் தவம்.

12 ஆண்டுகளில் 100 படங்கள் - ஒவ்வொன்றும் ஒரு காவியம்! ஒரு கலைஞன் தன் உடலையும் உள்ளத்தையும் உருக்கித் தந்தால் ஒழிய இத்தகைய 'மெனக்கெடல்' சாத்தியமில்லை.

கோடீஸ்வரத் தயாரிப்பாளர்கள் அவர் வாசலில் தவம் கிடந்தபோதும், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளைப் பார்த்து "இதில் இவ்வளவு தாள்கள் இருக்குமா?" என்று வியந்தாராம் அந்தப் பரிசுத்தமான குழந்தை.

பணத்தின் மீது பக்தி கொண்டவர்களிடம் கலை சாயம் போய்விடும்; ஆனால், நடிப்பின் மீது பக்தி கொண்ட இவரிடம் கலை 'சாகாவரம்' பெற்றது.

"தன்னால் யாரும் நஷ்டப்படக்கூடாது" என்ற ஒற்றை நோக்கம் அவரிடம் எப்போதும் உண்டு. நண்பர்களுக்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தது மட்டுமன்றி, படப்பிடிப்புத் தளத்தில் சக மனிதர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர். டிபன் பாக்ஸில் பணம் வைத்து அனுப்பிய தயாரிப்பாளரைக் கூட, தன் பெருந்தன்மையால் பணிய வைத்தவர் அவர்.

காஸ்ட்யூம் கிடைக்காத நேரத்தில், கிணற்றடியில் கிடந்த கிழிந்த சாக்கையே உடையாக உடுத்தி 'பரதேசி' கோலத்தை கண்முன் நிறுத்திய அந்த சமயோசித புத்தி, இயக்குநர்கள் கொண்டாடும் பேரதிசயம்.

"பெரிய நடிகர்களின் நூறு பட உழைப்பு, இந்தப் பாரதத்து ரத்தினத்தின் ஒரு படத்திற்கு ஈடாகாது." அவர் வெறும் நடிகர் அல்ல; தமிழ் சினிமாவின் அச்சாணி. அவர் ஆடிய ஆட்டம் முடிந்துவிட்டிருக்கலாம், ஆனால் அவர் ஏற்றி வைத்த கலைச் சுடர் என்றும் அணையாது.

செந்தில்வேல் சிவராஜ்..

Leave a Reply