2026 பிரான்ஸ் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் தலைமுறையினர்.
2026 மாநகராட்சி தேர்தல் உள்ளூர் நிர்வாக அமைப்புகளை தீர்மானிப்பதுடன், நாட்டின் அடுத்தகட்ட அரசியல் திசையையும் தீர்மானிக்கக் கூடிய முக்கியமான தேர்தலாகக் கருதப்படுகிறது.
இத் தேர்தலில் போட்டியாளர்களாகவும் கட்சி உறுப்பினர்களாவும் மேலும் பல வகிபாகங்களை வகிப்பவர்களாகவும் புலம்பெயர் ஈழத்து தலைமுறையினரும் பங்கேற்கிறார்கள். ஆஜோர்ந்தை, லாக்கூனெர்வ் ஒபர்வில்லியேர், வில்லியேர் ரூபல், பொண்டி, 77 மாவட்டத்தில் இல் ரூ, லூவ்ர், போன்ற மாநகரங்களில் இருந்து இவர்களும் போட்டியாளர்களாகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் 2026 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி (Municipal) தேர்தல் 15 மார்ச் மற்றும் 22 மார்ச் ஆகிய தேதிகளில் இரண்டு சுற்றுகளாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் ஊராட்சிகளில் மாநகர சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்; பின்னர் அந்த உறுப்பினர்களே தங்களுக்குள் இருந்து மேயரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
பிரான்ஸ் தேர்தல் முறையின்படி, முதல் சுற்றில் ஒரு பட்டியல் 50 சதவீதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றால் அது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். எந்த பட்டியலும் அந்த அளவை எட்டாதபட்சத்தில், அதிக வாக்குகள் பெற்ற பட்டியல்கள் இரண்டாம் சுற்றில் போட்டியிடும். 1,000 பேருக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பட்டியல் முறை (proportional list system) நடைமுறையில் உள்ளது.
பிரான்ஸ் குடிமக்களுடன், பிரான்சில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பதிவு செய்யப்பட்ட குடிமக்களும் மாநகராட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும்.























